கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ளது காரங்காடு. இங்கு 1778-ல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பழமையான புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது. கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்திற்கு பிறகு கட்டப்பட்ட முதன்மையான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். முளகுமூடு, முள்ளங்கினாவிளை, மணலிக்கரை, ஆலஞ்சி, மாங்குழி, புத்தன்கடை, மாத்திரவிளை, பழையகடை, திருவிதாங்கோடு, கண்டன்விளை, மாடத்தட்டுவிளை உள்ளிட்ட ஆலயங்கள் காரங்காடு ஆலயத்தின் கிளை பங்காக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு 246-வது ஆண்டு திருவிழா கடந்த 14-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி வழக்கம் போல காரங்காட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று( 22 ம் தேதி) இரவு நற்கருணை ஆசீர் முடிந்து புனிதரின் திருத்தேர் பவனி நடந்தது. இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் திடீரென காரங்காடு மேற்கு தெருவில் கட்டப்பட்டு இருந்த மின் விளக்குகள் அனைத்தும் அணைந்து உள்ளன. என்னவென்று பார்த்தபோது முகமூடி அணிந்த சமூக விரோத கும்பல் மேற்கு தெரு பகுதியில் உள்ள ஒலிபெருக்கி, சிசிடிவி கேமராவை அடித்து உடைத்து உள்ளனர். இவர்களை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடம் வந்த போலீசார் அடித்து உடைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி, சிசிடிவி ஆகியவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது முகமூடி அணிந்த நபர் அப்பகுதியில் நடந்து வருவது பதிவாயிருந்தது. இந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு குளச்சல் ஏஎஸ்பி பிரவின் கவுதம் தலைமையில் இரணியல் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். அதேபோல் தடய அறிவியல் ஆய்வக அதிகாரி மினிட்டா தலைமையிலான அதிகாரிகள் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இந்த நாசவேலையில் செயல்பட்ட முகமூடி அணிந்த சமூக விரோத கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆலய திருவிழாவில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி, சிசிடிவி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.