நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு தகுந்த இழப்பீடு
மத்திய அமைச்சரிடம் விஜய்வசந்த், எம்.பி கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலை பணிகளுக்காக தங்கள்
நிலத்தை அளித்தவர்களுக்கு தாமதம் இன்றி உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கன்னியாகுமரி பாராளுமன்ற
உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
புதுடில்லியில் மத்திய அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்த விஜய்வசந்த் கோரிக்கைகளை கடிதம் மூலமாக அளித்துள்ளார்.
நான்கு வழி சாலை பணிகளுக்காக தங்களின் நிலங்களை அரசுக்கு அளித்த மக்களுக்கு போதிய
இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பதிசாரம் குன்னத்தூர்,
பேரூர், கப்பியறை, ஆளூர், தோவாளை, பெருங்குடி மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களுக்கு உட்பட்ட
மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு
மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் 2013ன் படி இந்த ஊர் மக்களும் இழப்பீடு தொகைக்கு உரிமையானவர்கள்.
நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட ஆட்சியர் முன் 2018 பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தின் போது இந்த
இழப்பீடு தொகையை வழங்க ஒத்துக் கொண்டது. ஆனால் பின்னர் நெடுஞ்சாலைத்துறை உரிய இழப்பீடு
வழங்க மறுத்து விட்டது. இந்த கிராமங்களுக்கு பழைய சட்டத்தின் கீழ் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும்
என்று தெரிவித்தது. 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் இழப்பீடு வழங்குவதை தேசிய நெடுஞ்சாலைத்துறை
நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கையால் 251 நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலை
துறைக்கு ஆணையிட்ட பின்னரும் இந்த தொகையை வழங்குவதற்கு நெடுஞ்சாலைத்துறை மறுத்து
வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி பதற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆகையால் தாங்கள் நெடுஞ்சாலை துறையை அறிவுறுத்தி நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று
இழப்பீடு தொகையை விரைவில் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நான்கு வழி சாலை திட்டத்தினை விரைவாக முடிப்பதற்கு இது மிகவும் முக்கியமானது என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.