மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
38 பயனாளிகளுக்குரூ.1.55 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்
மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 177 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அகவை முதிர்ந்த 6 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைக்கான ஆணைகளையும், சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000 மதிப்பீட்டிலான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் , தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில் தாட்கோ கீழ் 17 பயனாளிகளுக்கு தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 90 சதவீதம் மானியத்திலான அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான ஆணைகளையும் என மொத்தம் 38 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் அதன் பயன்களையும் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை) நாகராசன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.