அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, இந்திய அஞ்சல் துறை பிப்ரவரி 1ம் தேதி முதல் 28 தேதி வரை பார்சல் சிறப்பு முகாம் நடத்துகிறது. இந்த முகாம், கன்னியாகுமரி கோட்டம் முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமின் முக்கிய நோக்கம், வணிக நிறுவனங்கள், தொழில்துறை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப அஞ்சல் துறையின் பார்சல் சேவையை பயன்படுத்துதல்.
நூல்தொழில் மற்றும் துணி பொருட்கள் (சேலை, உடைகள், பருத்தி துணிகள், தயாரிக்கப்பட்ட ஆடைகள்), மருத்துவ தயாரிப்புகள் (ஆயுர்வேதம் உள்ளிட்டவை), மின்னணு பொருட்கள் மற்றும் கருவிகள் (கைபேசி உபகரணங்கள், சில்லறை மின்னணு பொருட்கள்), கைவினைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள், உணவுப் பொருட்கள் (பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், கைருசி தயாரிப்புகள்) உள்ளிட்ட பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்ப, அஞ்சல் துறையின் பார்சல் சேவையை பயன்படுத்தலாம்
மாறுபட்ட அளவுகளிலும் எடை வரம்புகளிலும், சிறிய பார்சல்களில் இருந்து பெரிய பொருட்கள் வரை அனுப்புவதற்கு சிறந்த வசதிகள் உள்ளன. உங்கள் பார்சல்களை அஞ்சல் துறை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு சேர்க்கும். சிறப்பு முகாமின் போது சில குறிப்பிட்ட வகை பார்சல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை – கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த முகாம் நடைபெறும். இந்த முகாமில், வணிக நிறுவனங்கள், ஹோம்மேட் தயாரிப்பாளர்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள், மற்றும் சிறு வியாபாரிகளுக்காகத் தனி பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் துறையுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கேற்ப சிறப்பு சேவைகளை பெறலாம். அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பார்சல்களை பாதுகாப்பாக அனுப்ப அஞ்சல் துறையின் சிறப்பு முகாமை பயன்படுத்துங்கள். இவ்வாறு கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.