கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த – சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள சிறப்பு தீவிர திருத்தம் – 2026 ஆனது 1.1.2026-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் முதற்கட்டமாக வாக்காளர்களின் வீடுகள் தோறும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யும் பணி 4.11.2025 முதல் நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1702 வாக்குசாவடி நிலைய அலுவலர்களும், 193 வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வாக்காளர் பதிவு அலுவலர்களும், 18 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 6 கண்காணிப்பு அலுவலர்களும், ஒவ்வொரு வட்டத்திற்கும் கூடுதலாக கண்காணித்திட 18 வட்டாட்சியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளது தேதி வரை 93.55 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 14.11.2025 முதல் வரும் 24.11.2025 வரை வீடு வீடாக சென்று இந்த கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நிரப்புவதற்காகவும், திரும்ப பெறுவதற்காகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 15.11.2025 (சனிக்கிழமை), 16.11.2025 (ஞாயிற்றுகிழமை) ஆகிய இரண்டு தினங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளதால் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கணக்கீட்டு படிவங்களை நிரப்பபவும் மற்றும் திரும்ப ஒப்படைக்கவும் வாக்காளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் https://voters.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவும் 2002 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் களப்பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர்கள் உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்
