கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய பவள விழா, தனிபங்கு உதய வெள்ளி விழா, பங்கு குடும்ப விழா ஆகிய முப்பெரும் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முதல் நாளான இன்று (26 ம் தேதி) காலையில் முன்னோர் நினைவுத் திருப்பியும், திருக்கொடி காணிக்கை வைத்தலும் நடந்தது. மாலையில் செபமாலை, நவநாள், 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை அருட்பணி மைக்கேல் அலோசியஸ் தலைமையில் முளகுமூடு மறைவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரருட்பணி மரிய இராஜேந்திரன் செபிக்க, வெள்ளிக்கோடு பங்குத்தந்தை அருட்பணி ஆன்றூஸ் சிந்திக்க, களியக்காவிளை நாஞ்சில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் அருட்பணி எக்கர்மன்ஸ் மைக்கேல் இணைந்து செபிக்கவும் செய்தார்கள். இந்த கொடியேற்றத்தில் பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்கு மக்கள் மற்றும் பல ஊர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, நவநாள், திருப்பியும் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு முழுநாள் நற்கருணை ஆராதனையும், மாலை 5 மணிக்கு நற்கருணை பவனியும் 6.30 மணிக்கு புனித வளன் மறைக்கல்வி மன்றம் ஆண்டுவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 9 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு செபமாலை, நவநாள், 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. 10 ம் திருவிழாவான மே மாதம் 5 ம் தேதி காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி, உறுதி பூசுதல் குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் செபிக்க, சிந்திக்க நடக்கிறது. மாலை 4 மணிக்கு தேர்ப்பவனி, 5.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு கத்தோலிக்க சேவா சங்கம் வழங்கும் மாவீரன் புனித பங்கிராஸ் வரலாற்று நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருட்பணி மைக்கேல் அலோசியஸ், பங்கு அருட்பணி பேரவை, பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.