தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட அறிவுசார் மைய கட்டிடத்தில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மொத்தம் 71 அறிவுசார் மையங்களில் 33 அறிவுசார் மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைத்துள்ளார். அதில், நமது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ. 1.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மையமும், காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கண்ணதாசன் மணிமண்டப வளாகத்தில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மையங்களும் ஒன்றாகும்.
மாணாக்கர்களின் எதிர்கால் நலனை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு முதலமைச்சரால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவு போட்டிகள் நிறைந்த இந்நவீன காலத்தில் மாணாக்கர்கள் சிறந்த முறையில் பயின்று தங்களுக்கான துறையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி காண வேண்டும்.
அதற்கு அடிப்படையாகவும் தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டு, மாணாக்கர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு அத்திட்டம் ஊன்றுகோளாக அமைகிறது. குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், நூலகங்கள் என்பதையும் தாண்டி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் மையங்களை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, இன்றைய தினம் அம்மையங்கள் திறப்பு விழா காணப்பட்டு உள்ளது. மாணாக்கர்களுக்கு போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில் இம்மையங்கள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது கல்வி அறிவினை பொறுத்தே அமைகிறது. எனவே, எதிர்கால் தூண்களாகிய மாணாக்கர்கள் தங்களது கல்வித்திறனை மேம்படுத்திக்கொள்வதற்கும், தங்களுக்கான வாசிப்பு திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், தங்களுக்கான இலக்கினை எய்துவதற்கும் இம்மையங்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்ல முறையில் பேணிக்காத்திட வேண்டும். இம்மையங்களில் தற்போதுள்ள வசதிகளை விட இன்னும் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு உள்ள இந்த அறிவுசார் மையத்தினை சுற்று வட்டார பகுதியிலுள்ள அனைத்து மாணாக்கர்களும், இளைஞர்களும், மூத்தோர்களும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு , பயன்பெற வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், திருப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் கோகிலாராணி, காரைக்குடி நகர் மன்றத்தலைவர் முத்துதுரை, உதவி இயக்குநர் (பொ) பேரூராட்சிகள் ஜெயகிருஷ்ணன், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி நகராட்சி பொறியாளர் இசக்கி, திருப்பத்தூர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், ஒப்பந்ததாரர்கள் இளங்கோவன் எம்.ஆர்.சி மற்றும் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.