78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடு தேடி வருகிறது தேசியக்கொடி – இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு.
நமது நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-8-2024 அன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லம் தோறும் மூவர்ணம் என்ற திட்டத்தின் கீழ் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி ஏற்றும் நிகழ்வு சென்ற இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த வருடமும் கடைபிடிக்கப்பட இருக்கிறது. எனவே பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும் வணிக நிர்வாகத்தினரும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன்பெறும் வகையில் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் உட்பட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் https://www.epostoffice.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக வாடிக்கையாளர்கள் பதிவு செய்வதின் மூலம் தேசியக்கொடியை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.