பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் தற்போது 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் அமைதியான முறையில் தேர்வுக்கு தயாராவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும். எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது:
நேரக் கட்டுப்பாடு
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது.
விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து மதம் சார்ந்த விழாக்கள்; அரசியல் கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள் அல்லது தனியார் இல்ல விழாக்களில் நிர்ணயிக்கப்பட்ட 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
காவல்துறையின் எச்சரிக்கை
இந்த விதிகளை மீறி, மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும்.
பொதுமக்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் இந்த தேர்வு காலத்தில் சமூக அக்கறையுடன் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலினின் கருத்து மையம் 7708239100 மற்றும் 8122223319 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
