
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்கள் சந்திப்பில், தெரிவிக்கையில் –
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டுக்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, மக்களுடன் முதல்வர் திட்டத்தினை அறிவித்து, மிகச்சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து மக்களின் குறைகளைத்தீர்க்க அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கூலித்தொழில் செய்யும் ஏழை எளிய மக்களின் வசதிக்குகேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், தேவைகளையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வழிவகை செய்கிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களின் அருகாமையில் உள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் தனியார் மண்டபங்கள், பள்ளி கலை அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் வரும் 15 ம்தேதி தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும். தமிழ்நாட்டிற்கு உட்பட்ட நகரப்பகுதிகளில் 3,768 முகாம்களும், கிராமப் பகுதிகளில் 3,232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும், மருத்துவ முகாம்கள் நடைபெறும்.
மேலும் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை, மின்சாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், கால்நடை பாரமரிப்புத்துறை, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், உள்ளிட்ட அரசு துறைகளை சார்ந்த சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படும்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் 58 முகாம்களும், நகர்ப்புற பகுதிகளில் 56 முகாம்கள் என மொத்தம் 114 முகாம்கள் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட முகாம்கள் 90 இடங்களிலும், மூன்றாவது கட்டமாக 84 இடங்களிலும், நான்காவது கட்டமாக 53 இடங்கள் என மொத்தம் 341 முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் ஊரகப்பகுதிகளில் 4,88,277 வீடுகளும், நகர்ப்புற பகுதிகளில் 2,26,695 வீடுகள் என மொத்தம் 7,14,972 வீடுகள் பயனடைவார்கள். முதற்கட்ட முகாம்களில் கலந்துகொள்வதற்கு ஊரகப்பகுதிகளில் 1,42,587 வீடுகளும், நகர்ப்புற பகுதிகளில் 76,793 வீடுகள் என மொத்தம் 2,19,380 வீடுகளுக்கு தன்னார்வலர்கள், சமுதாய வள பயிற்றுனர்கள், இல்லம்தேடி கல்வி பணியாளர்கள், சுயஉதவிகுழுவினர், நகர்புற களப்பணியாளர்கள் என 900க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநராட்சிகள், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வீடுவீடாக நேரடியாக சென்று விண்ணப்ப படிவம், மடிப்பேடு, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள் மற்றும் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்ற விவரத்தினை பொதுமக்களுக்கு தெரிவித்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்படிவங்கள் மற்றும் மடிப்பேடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாம்களில் 13, 14 துறைகளின் கீழ் தாட்கோ கடன்கள், இ- பட்டா, பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம், கல்வி உதவித்தொகை, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள், டாம்கோ கடன், ரேசன் கார்டு பெயர் மாற்றம் மற்றும் விண்ணப்பித்தல், மின்சார இணைப்பு மாற்றம், பெயர் திருத்தம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, ஆதார் பெயர் மாற்றம், புதுப்பித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான, திட்ட ஒப்புதல், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், வரி உரிமங்கள் மற்றும் அனுமதிகள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், காலியாக உள்ள நில வரி, தெருவோர விற்பனையாளர் அடையாள அட்டை, கழிவு நீர் இணைப்பு, சொத்துவரி, பெயர் மாற்றம், கட்டிடத் திட்ட ஒப்புதல், ஓய்வூதியம், தாமதமான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், உபகரணங்கள், பராமரிப்பு மானியங்கள், வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துதல், மின் வாடகை, கால்நடை கோழி வளர்ப்பு, புதிய வீட்டு வரி, வீட்டு வரி பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில் இருந்து, பொதுமக்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவித்து, விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விடுப்பட்ட மகளிர் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பிக்கலாம். இந்த முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ளும் அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள், ஐயப்பாடுகள், பிரச்சனைகளை கனிவுடன் கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதில் கிடைக்க பெறாத பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மே ஐ ஹெல்ப் யு வாயிலாக முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்த துறை அரங்குகளுக்கு அழைத்து செல்வார்கள்.
மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள், சேவைகள், அனைத்து துறை சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி ஆட்டோக்கள், கேபிள் டிவி, சமூக ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தபட்டு வருகிறது. இந்த முகாம் வெற்றிக்கரமாக மக்களை சென்றடைய பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிநவீன மின்னணு வாகனம் வாயிலாக பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார். செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண்ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, உசூர் மேலாளர் சுப்பிரமணியம், பத்திரிக்கை, ஊடக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.