சிவகங்கை மாவட்டம், கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா நாள் விழா ஆகியவைகளை முன்னிட்டு, ஆலங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவிக்கையில்,
உலக சுற்றுலா நாளான செப்டம்பர் 27 ஆம் தேதியினை, தமிழ்நாடு அரசு, சுற்றுலாத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு உலக சுற்றுலா நாள் விழா – 2023வுடன், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கும் சிறப்பு சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களில் தூய்மைப் பணி முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடத்திட திட்டமிடப்பட்டு, “சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்”என்ற கருப்பொருளினை மையமாக கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கல்லூரி மாணாக்கர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணி முகாம் மற்றும் தமிழ் மொழி, இனம், கலாச்சாரம் பண்பாடு ஆகியவைகள் தொடர்பாக கானாடுகாத்தான் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் .பெரியகருப்பன் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, உலக சுற்றுலா நாளினை முன்னிட்டு, பள்ளி மாணாக்கர்களிடையே “சுற்றுலா மற்றும பசுமை முதலீடுகள்” தொடர்பாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலங்குடி மேலமாகாணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், ஆலங்குடி - மேலமாகாணம் கண்மாய் கரையில் 100 பனைவிதைகள் மற்றும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ) சங்கர், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆலங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் மலைச்சாமி, ஆலங்குடி பள்ளித் தலைமை ஆசிரியை சித்ரா, பள்ளி மாணவ, மாணவியர்கள், செட்டிநாடு பாரம்பரிய தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.