எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Share others

சர்வதேச இளைஞர் தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தொழில்நுட்ப வசதிகள் இளைஞர்களை எச்ஐவி/எய்ட்ஸ், போதை பொருட்களுக்கு அருகில் அழைத்துச் செல்லாதவாறும். எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் எச்ஐவி பரிசோதனையை அதிகப்படுத்தும் வகையிலும். எச்ஐவி உள்ளோரை ஒதுக்குதல் புறந்தள்ளுதல் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான இந்த மராத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று காலை நடந்தது. மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வழிகாட்டுதலில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி மேற்பார்வையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலக திட்ட மேலாளர் டாக்டர் பெடலிக்ஸ்ஷமிலா, நலக்கல்வியாளர் சூரியநாராயண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மேற்பார்வையாளர் சிவகுமார் வரவேற்றார். போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

அண்ணா ஸ்டேடியத்தில் இருந்து ஓட்டத்தை தொடங்கிய மாணவர்கள் மணிமேடை ஜங்ஷன், கோட்டாறு காவல் நிலையம், ஒழுகினச்சேரி வழியாக வடசேரி வந்து மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தனர். இதில் மாணவர்கள் பிரிவில் மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கல்லூரி மாணவர் அகில்ராம் முதலிடமும், லயோலா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பவித் 2-ஆம் இடமும், புனித அல்போன்சா கல்லூரி மாணவர் விஷ்ணு 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர். மாணவியர்கள் பிரிவில் நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். அதன்படி மாணவி ரம்யா முதலிடமும், ஹரிஷ்மா 2-ஆம் இடமும், அனிஷா 3-ஆம் இடமும் பிடித்தனர்.

முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனியாக ரொக்கப் பணம் ரூ. 10 ஆயிரம் மற்றும் வெற்றி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பிடித்தவர்களுக்கு ரொக்க பணம் தலா ரூ. 7000 , வெற்றிச் சான்றிதழும், 3-ஆம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் வெற்றிச் சான்றிதழ்கள்கள் வழங்கப்பட்டது. ஏஆர்டி நோடல் ஆபீசர் டாக்டர் காவேரி கண்ணன் நன்றி கூறினார். வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம், ஏஆர்டி மையம், நம்பிக்கைமையம், சுகவாழ்வுமையம் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *