ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று

Share others

தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்கள், 1 ஜூலை 2023 முதல் வீட்டிலிருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை, டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் , தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே, கடந்த 30.6.2023 அன்று கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சுமார் 7,00,198 தமிழக அரசு ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள், ஜூலை 1 முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டு , தங்களது சான்றிதழை சமர்ப்பித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என்றும், கடந்த ஆண்டு சுமார் 1.75 லட்சம் தமிழக அரசு/குடும்ப ஓய்வூதியர்கள் வீட்டிலிருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்ததாகவும், கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய அஞ்சல் துறையின் சார்பில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 1, 2018 அன்று துவங்கப்பட்டு, இந்த குறுகிய காலத்தில், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள 136000 அஞ்சலகங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்தி, 7 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கி உள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டத்தில், 250-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மூலமாகவும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 450-க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும், வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தமிழக அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *