கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு பணியில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் சான்றிதழ்கள் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சார்பில் கடலோர பகுதிகளில் பணியில் ஈடுபட உள்ள வீரர்களுக்கான மூன்று நாள் பயிற்சியில் இறுதி நாள் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சியினை பார்வையிட்டு சான்றிதழ்கள் வழங்கி தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் கடல் பகுதி மற்றும் ஊரக பகுதிகளில் ஏற்படும் மாய அலைகள், கடல் கொந்தளிப்புகள் மற்றும் வெள்ள அபாயத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை பாதுகாத்திடவும், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடற்பகுதியில் மாய அலையில் சிக்கி உயிர்பலி ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர்களை தீயணைப்பு படை, கடலோரக் பாதுகாப்பு படை ஆகியோருடன் காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக சுப் மெரினா மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக தமிழ்நாடு ஆயுதப்படை காவலர்கள், கடலோர காவல் குழுமம், கடலோர தன்னார்வலர்கள், மாவட்ட நீச்சல் வீரர்கள் இணைந்து காவல்துறை கடலோர பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சுப் மெரினா மூலம் கடந்த சில நாட்களாக பயிற்சி வழங்கப்பட்டு, நிறைவடைந்தது.
நடைபெற்ற பயிற்சியில் மீட்புக்கோட்பாடு வகுப்பு, நீச்சல் திறன், இடம் பகுப்பாய்வு, நீர் அறிவு, உடற்பயிற்சி, அடிப்படை மீட்புப்பயிற்சி, டியூப் மீட்பு ரிப் கரன்ட் மூலம் எடுக்கப்பட்ட அரை நீச்சல் வீரர், பொது விளையாடும் பந்து மற்றும் பெரிய அலைகளில் மிதவைகள் மூலம் மீட்பு பயிற்சி, ஆழமான கடல் நீரோட்டத்தில் நீச்சல் வீரர் சிக்கினால் ஸ்டாண்ட் அப் பேட்லிங் மீட்பு பயிற்சி, மீட்கப்பட்ட மயக்கமடைந்த பாதிக்கப்பட்டவருக்கு சிபிஆர் மூலம் உயிர் காக்கும் பயிற்சி, கடலோர காவல்துறை மீட்பு பயிற்சியாளர்களுக்கு த்ரோபேக் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஒத்திகை நிகழ்ச்சியில் உயிர்காக்கும் வளையம் மூலம் கடலில் சீக்கியவர்களை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து அவர்களுக்கு முதலுதவி வழங்குவது உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் இனிவரும் காலங்களில் ஏற்படும் பேரிடர் மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காவல்துறையினரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட இந்த பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும். பயிற்சியில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சுப் மெரினா பயிற்சி மூலம் பயிற்சி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், முன்னிலையில் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ராஜேஷ், கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், சுப் மெரினா பயிற்சியாளர் சதீஷ் குமார், ஆயுத ரிசர்வ் காவலர்கள், கடலோர தன்னார்வலர்கள், மாவட்ட விளையாட்டு வீரர்கள், காவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.