கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா
1924 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்ட கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா செப்டம்பர் மாதம் 27ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தேவாலயங்களில் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயமும் ஒன்று. 1923 ஆம் ஆண்டு ரோம் நகரில் குழந்தை தெரசா அருளாளராக அறிவிக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்ட கொல்லம் மறை மாவட்ட ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் கண்டன்விளையில் எழுப்பப்படும் ஆலயம் குழந்தை தெரசாவின் முதல் ஆலயமாக அமையும் என்பதை ஆயர் பேரவையில் அறிவித்தார். 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் உலகிலேயே முதன்முதலாக கண்டன்விளையில் குழந்தை தெரசாவுக்கு ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த ஆலயம் தற்போது நூற்றாண்டை கண்டு உள்ளது.
இந்த நூற்றாண்டு பெருவிழா செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. விழாவின் முதல் நாள் காலையில் முன்னோர் நினைவு சிறப்புத் திருப்பலியும், கல்லறைத் தோட்டம் மந்திரிப்பும் நடந்தது. மாலையில் திருக்கொடி பவனி, திருச்செபமாலை, புகழ்மாலையும், கோட்டாறு மறை மாவட்ட மேதகு ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருக்கொடியேற்றம், திருப்பலி, புதிய நற்கருணை பேழை அர்ச்சிப்பும் நடந்தது . தொடர்ந்து அன்பு விருந்து நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
5-ஆம் நாள் விழாவான 1-ம் தேதி மாலையில் கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையேற்று அருளுரை வழங்கும் திருப்பலி, நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடும், தொடர்ந்து அன்பு விருந்து, தங்கத் தேர்பவனியும், 8-ஆம் நாள் விழாவான நான்காம் தேதி மாலையில் உரோமை பேரருள்தந்தை ஞானதாஸ் தலைமை ஏற்று அருளுரை வழங்கும் திருப்பலியில், காரங்காடு வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ், திருத்துவபுரம் பேராலய அதிபர் ஐசக்ராஜ் ஆகியோர் இறைவேண்டல் செய்தனர். விழாவில் அன்னைக்கு அர்ப்பணிக்கப்படும் புதிய கெபி அர்ச்சிப்பும் நடந்தது.
9-ஆம் நாள் விழாவாங 5-ம் தேதி காலையில் முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலி மண்ணின் மைந்தர் அருட்பணி தாமஸ் குருசப்பன் தலைமையில் மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய ராஜேந்திரன் அருளுரையோடு நடந்தது. மாலையில் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட மேதகு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடந்தது. இரவில் திருத்தேர் பவனியும் நடந்தது.10-ஆம் நாள் விழாவான 6-ம் தேதி காலை 5:30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா சிறப்புத் திருப்பலி அகமதாபாத் மறைமாவட்ட மேதகு ஆயர் அத்தனாசியுஸ் இரத்தினசாமி தலைமையில் நடந்தது. காலை 10 மணிக்கு மலையாளத் திருப்பலி திருவனந்தபுரம் மறைமாவட்ட அருட்பணி இஞ்ஞாசி இராஜசேகரன் தலைமையில் நடந்தது.காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலையில் நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கம், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. நூற்றாண்டு பெருவிழா ஏற்பாடுகளை கண்டன்விளை பங்குப் பணியாளர் மரிய வின்சென்ட், இணைப் பங்கு பணியாளர் பிரிதிவி தாமஸ், பங்கு அருட் சகோதரிகள், பங்குப் பேரவை துணைத் தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணைச் செயலாளர் லில்லிமலர், பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.