கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய சிறப்பு
பங்குத்தந்தை சகாய ஜஸ்டஸ் தகவல்
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டன்விளையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். உலகின் முதல் முதலாக குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு கட்டப்பட்ட ஆலயம் என்ற சிறப்புடன் விளங்கும் ஆலயம் குறித்தும், அதன் வரலாறு, சிறப்புகள் குறித்தும் பங்குத்தந்தை அருட்பணி. சகாய ஜஸ்டஸ் தெரிவிக்கையில்,
கண்டன்விளை மக்கள் ஆலய வழிபாட்டிற்காக சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரங்காடு பகுதிக்கு கால்நடையாக சென்று வந்த கால கட்டத்தில் கண்டன்விளை மக்களின் ஆன்மீக தேவையை கருத்தில் கொண்டு அருகில் ஆலயம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டார் காரங்காடு பங்கு தந்தை இக்னேஷியஸ் மரியா. இதையடுத்து ஆலயம் அமைக்க இடம் பார்க்கப்பட்டது. அதன் விளைவாக 7.4.1924 அன்று முதல் ஆலயம் கண்டன்விளையில் உதயமானது. மறு கட்டமாக 18.9.27 அன்று புதிய ஆலயத்திற்கான பணி அருட்தந்தை இக்னேஷியஸ் மரியாவால் ஆரம்பிக்கப்பட்டு 7.4.1929ல் அன்று பெரிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
புனிதை கண்டன்விளையில் கால் பதித்த வரலாறு
29.4.1923ல் குழந்தை இயேசுவின் தெரேசாவுக்கு அருளாளர் பட்டம் கிடைத்தது. 7.4.1924 ல் கண்டன்விளையில் முதல் ஆலயம் நிறுவப்பட்ட நிலையில், சிறுமலர் தெரேசாவுக்கு 17.5.1925 அன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட கொல்லம் ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப்பப்படும் ஆலயம் புனிதையின் முதல் ஆலயமாக அமையும் என்று ஆயர் பேரவையில் அறிவித்தார். அதன்படி குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்காக கட்டப்பட்ட உலகின் முதல் ஆலயம் என்ற பெரும் பேற்றை பெற்று குன்றாத புகழுடன் உலகெங்கும் புனிதையின் பெயரை பறைசாற்றி வருகின்றது கண்டன்விளை ஆலயம்.
ஆலயத்தின் சிறப்பு அம்சங்கள்
5.11.1944 அன்று கண்டன்விளை காரங்காட்டில் இருந்து பிரிந்து தனி பங்காக மாறியது. அன்று தான் நோயுற்றவர்கள் நலம் வேண்டி நிற்கும் லூர்து அன்னை கெபி அர்ச்சிக்கப்பட்டது.
புனிதையின் ஆலயமானது முப்பக்கங்களிலும் வானளாவிய உயர்ந்து நிற்கும் கோபுரங்களை கொண்டது. அவை முறையே மேற்கு கோபுரம் 5.10.1979 அன்றும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் 23.9.1994 அன்றும் அர்ச்சிக்கப்பட்டன.
ஆலய முற்றத்தில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒற்றை கல்லால் ஆன 50 அடி உயர கொடி கம்பம் 24.9.1948 அன்று நிறுவப்பட்டது.
12.2.1967 அன்று அர்ச்சிக்கப்பட்ட 8 பட்ட வடிவிலான நான்கு மாடிகள் கொண்ட குருசடி திங்கள்சந்தை – நாகர்கோவில் சாலையோரம் ஓங்கி நின்று கடந்து செல்வோரின் கவனத்தை ஈர்க்கிறது.
சிற்றாலயத்தின் சிறப்பு அம்சங்கள்
அழகிய வேலை பாடுகளுடன் கூடிய அருமையான சிற்றாலயம் ஒன்று சாலையின் எதிர்புறம் உள்ள மலையில் அமைக்கப்பட்டு 6-2-2005 அன்று அர்ச்சிக்கப்பட்டு ஜெபமாலை மலை சிற்றாலயம் என்ற பெயரில் இறைமக்கள் இறை வேண்டல் செய்ய உகந்ததொரு புண்ணிய பூமியாக திகழ்கிறது. அந்த மலையில் இறை மகனை மடியில் சுமந்த வியாகுல அன்னையின் திருவுருவம் 35 அடி உயரத்தில் அற்புதமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இயேசுவின் கல்லறையை நமக்கு நினைவூட்டும் அழகிய குகையும் அமைக்கப்பட்டு நாடி வருவோருக்கு அமைதியை அளிக்கிறது.
ஜெபமாலை மலை சிற்றாலய நுழைவுவாயிலில் கல்லால் ஆன குருசடி எழிலுற அமைந்து காண்போரை கவர்ந்து இழுக்கிறது.
ஜெபமாலை மலை சிற்றாலயத்திற்கு செல்லும் வழியின் இருபுறமும் இயேசுவின் பாடுகளின் 14 நிலைகளும் நிறுவப்பட்டு உள்ளன.மேலும் தேவ ரகசியங்களும் சித்திரங்களாக செலுத்தப்பட்டு உள்ளன. அங்கு புனித வெள்ளி அன்று நடைபெறும் சிலுவை பாதை பிரசித்தி பெற்றது ஆகும்.
சிற்றாலயத்தை சற்று உற்று நோக்கும் போது இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சை பசேல் இயற்கை காட்சிகள் காண்போரை மகிழ்விக்கிறது. சிற்றாலயத்தில் தவக்கால சிறப்பு நிகழ்வாக குருத்தோலை ஞாயிற்று கிழமையின் முந்தைய சனிக்கிழமை ஜெபமாலை, சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியும் அதை தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இறை மக்கள் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் பங்கேற்று இறை அருள் பெற்று செல்கிறார்கள்.
ஆலய வழிபாடு சிறப்பு நிகழ்வுகள்
ரோமில் இருந்து திருத்தந்தையால் அனுப்பப்பட்ட புனிதையின் பேரருளிக்கம் பக்தர்களின் வணக்கத்திற்காக ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசி வெள்ளிக்கிழமை மாலை திருக்கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி 10 நாட்கள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. புனிதையின் பெயர் கொண்ட திருவிழாவாகிய அக்டோபர் 1ம் நாள் சிறப்பு நிகழ்வாக தங்கதேர் பவனி நடைபெறும். இந்த நிகழ்வில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
திருவிழாவின் நிறைவு நாட்களில் நடைபெறும் தேர் பவனிக்காக அமைக்கப்பட்டு உள்ள இரு தேர்களில் ஒன்று 36 அடி உயரத்தில் ஓங்கி நின்று கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலய தேர்களில் முதன்மையாக விளங்குகிறது.
ஆலய பொன்விழா நிகழ்வாக ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் நவநாள் திருப்பலி நடைபெற்று வருகிறது. புனிதை வழியாக அருள் வரங்களை அள்ளி செல்ல இறைமக்கள் பங்கேற்று புனிதைக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
சித்தன்தோப்பு, பண்டாரவிளை,இரணியல் ஆர்சி தெருவில் உள்ள ஆலயங்கள் கிளை பங்காக உள்ளன. இவ்வாறு பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ் தெரிவித்தார்.
புனிதையின் சகோதரிகள் அனுப்பிய மணி
1931ம் ஆண்டு இரு ஆலய மணிகள் மற்றும் கார்மல் மாதா சொரூபம் புனிதையின் உடன் பிறந்த சகோதரிகளால் பிரான்ஸ் நாட்டில் இருந்து அன்பளிப்பாக கண்டன்விளை ஆலயத்திற்கு அளிக்கப்பட்டன. அந்த மணிகளில் நான் அனைத்து இந்திய மக்களையும் சிறுமலருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு வரவழைப்பேன் என்று பொருள்படும் சொற்றொடர் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயலானது புனிதையின் சகோதரிகளின் அன்பையும், நட்புணர்வையும் சுட்டிக்காட்டுகிறது.
புதுமைகள் ஏராளம்
புதுமைகள் கோடி புரிந்து வரும் நம் புனிதையிடம் குடும்பத்தில் சமாதானம் நிலவ, உடல் நலம் பெற்றிட, கடன் தொல்லையில் இருந்து விடுபட, குடும்ப பிரச்னைகள் நீங்க, தொழில் முன்னேற்றம் அடைய, குழந்தை செல்வம் கிடைக்க, திருமணம் நடக்க என்பது போன்ற பல விண்ணப்பங்களை எழுப்பி குழந்தை இயேசுவின் புனித தெரேசா வழியாக பக்தர்கள் அடைந்து வரும் நன்மைகள் ஏராளம். கடந்த 2020 ஆலய திருவிழாவின் போது மின் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரித்து கொண்டிருந்த ஊழியர் சுமார் 72 அடி உயர கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தார். விந்தையிலும் விந்தையாக அவர் எந்த வித ஆபத்தும் இன்றி உயிர் பிழைத்தார்.
கண்டன்விளையில் அமைந்து உள்ள அருட்பணி பேரவை அலுவலகம், கோபுரங்கள், நடுநிலைப்பள்ளி, மழலையர் பள்ளி, தெரஸ் அரங்கு, யூடிகா மருத்துவமனை, அருட்சகோதரிகள் இல்லம் இவை அனைத்தும் பல்வேறு கால கட்டங்களில் கண்டன்விளை பங்கில் பணியாற்றிய பங்கு தந்தையர்கள், மற்றும் பங்கு மக்களின் அர்ப்பண உணர்வுடன் கூடிய உழைப்பால் உருவானவை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் இந்த ஆண்டு 100 ம் ஆண்டு தொடக்க திருவிழா நடக்கிறது. இந்த விழாவின் போது நூற்றாண்டு நினைவு கட்டிட அர்ச்சிப்பு, நூற்றாண்டு நினைவு சின்னம் அர்ச்சிப்பும் நடந்தது.