கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய மணிகள் பொதுமக்கள் பார்வைக்காக நவம்பர் 26 ம் தேதி வரை வைக்கப்படுகிறது

Share others

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோட்டில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் அமைந்து உள்ளது கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். உலகிலேயே புனிதராக அறிவிக்கும் முன்பே சிறுமலர் தெரேசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம் ஆகும். இந்த ஆலயம் 1924ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டது. 1925 மே 17ல் சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார்.

புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த இரண்டு சகோதரிகளால் 1931-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. புனிதையின் பேரருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் உள்ள இந்த 2 ஆலய மணிகளும் நவம்பர் மாதம் 26 ம் தேதி வரை அதாவது ஒரு வார காலம் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 ஆலய மணிகளில் ஒன்றில் புனித தெரசா உருவப்படமும், மற்றொன்றில் திருச்சிலுவையும் பொறிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு ஆலய மணியில் “புனித தெரேசாவாகிய நான் இந்தியாவில் உள்ள அனைத்து பக்தர்களையும் கண்டன்விளைக்கு அழைப்பேன்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. கண்டன்விளை ஆலய மணி கோபுரத்தில் சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த 2 ஆலய மணிகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருப்பலி நாட்களில் ஒரு ஆலய மணியும், திருவிழா காலங்கள் மற்றும் சிறப்பு திருப்பலி வேளைகளில் இரண்டு மணிகளும் ஒலிக்கப்படும்.

தற்போது இந்த 2 ஆலய மணிகளும் கீழே இறக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க ஆலய மணிகள் என்பதால் இவற்றை பார்வையிட பங்குமக்கள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த 2 ஆலய மணிகளும் பக்தர்கள் பார்வைக்காக ஒரு வார காலம் வைக்கப்பட்டுகிறது. ஆலயம் மற்றும் ஆலய மணி குறித்த ஆய்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த 2 ஆலய மணிகளும் 92 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பழமை மாறாமல் புத்தம் புதிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலய மணிகள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்த பக்தர்கள் உட்பட பல தரப்பட்டவர்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர். பக்தர்கள் மாலை மற்றும் மெழுகுவர்த்தியுடன் வந்து ஆலய மணியை பார்வையிட்டு வழிபட்டு செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை காரங்காடு வட்டார முதல்வரும் கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாய ஜஸ்டஸ், பங்குப்பேரவை துணைத் தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணைச் செயலாளர் லில்லிமலர் மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *