கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தேவாலயங்களில் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயமும் ஒன்று. 1923 ஆம் ஆண்டு ரோம் நகரில் குழந்தை தெரேசா அருளாளராக அறிவிக்கப்பட்ட பின், 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் உலகிலேயே முதன் முதலாக கண்டன்விளையில் குழந்தை தெரேசாவுக்கு ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த ஆலயம் தற்போது நூற்றாண்டை கண்டு உள்ளது.
இந்த ஆலய நூற்றாண்டு பெருவிழா கோலாகலமாக தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு கண்டன்விளை பங்கு இறைமக்கள் நூற்றாண்டு பெருவிழா திருக்கொடியை ஏந்தி மேள வாத்தியங்கள் முழங்க பவனியாக ஒவ்வொரு அன்பியமாக வந்தனர். பின்னர் திருச்செபமாலையும், புகழ்மாலையும் நடந்தது. தொடர்ந்து கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பக்தர்கள் புடைசூழ குழந்தை தெரேசா உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்பட்டது. தொடர்ந்து ஆயர் அருளுரையில் திருப்பலி, புதிய நற்கருணை பேழை அர்ச்சிப்பு, அன்பு விருந்து ஆகியவை நடந்தது. முன்னதாக காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு சிறப்புத் திருப்பலியும், 7.30 மணிக்கு கல்லறைத் தோட்டம் மந்திரிப்பும் நடந்தது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 8-ஆம் நாள் விழாவில் மாலை 7 மணிக்கு உரோமை பேரருள்தந்தை ஞானதாஸ் தலைமை ஏற்று அருளுரை வழங்கும் திருப்பலியும், அன்னைக்கு அர்ப்பணிக்கப்படும் புதிய கெபி அர்ச்சிப்பும் நடைபெறுகிறது. 9-ஆம் நாள் விழாவில் இரவு 9.30 மணிக்கு திருத்தேர் பவனியும், 10-ஆம் நாள் விழாவில் 6-ம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா சிறப்புத் திருப்பலி, காலை 10 மணிக்கு மலையாளத் திருப்பலி, காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கம், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கண்டன்விளை பங்குத்தந்தை அருட்பணி மரிய வின்சென்ட், இணை பங்குத்தந்தை அருட்பணி பிருதிவி தாமஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லில்லி மலர்,
பங்கு அருட் சகோதரிகள், பங்குப் பேரவையினர் மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.