வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட விவசாய விளைநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் மனிதக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை பார்த்த இளைஞர்கள் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டிய லாரியை கையும் களவுமாக பிடித்து பேரூராட்சியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் பேரூராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளை எரித்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே இங்கு கொட்டப்பட்டு குவியல் குவியலாக கிடந்த மருத்துவ கழிவுகளை விவசாயிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இது குறித்த செய்திகளும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. தொடர்ந்து பேரூராட்சி குப்பை கிடங்கில் இருந்து டெம்போக்களில் மருத்துவகழிவுகள் ஏற்றப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே சிபிஐஎம்எல் விடுதலைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமை வகித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து பேசினார். தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் சுசீலா, மாவட்ட செயலாளர் அர்ஜூனன், வில்லுக்குறி பேரூர் செயலாளர் மிக்கேல், மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் ஜஸ்டின் சுந்தர், செல்வராஜ், பாலையா, பேட்றஸ், காத்ரீனாள், ரஞ்சன், சுகுமார், வசந்தி, சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
