கன்னியாகுமரியில் வெள்ளி விழா முன்னேற்பாடுகள் ஆய்வு

Share others

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆகியோர் முன்னிலையில் அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரி கடலில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் கொண்டாட அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவிற்கான ஏற்பாடும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவானது உலகத் தமிழர்கள் அனைவர்களும் இணைந்து கொண்டாடும் வகையில் கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற உள்ளது.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்பொழுது அய்யன் திருவள்ளுவரின் சிலையை கன்னியாகுமரி கடலின் நடுவே நிறுவினார். சுனாமி ஆழிப்பேரலை மற்றும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி அய்யன் திருவள்ளுவர் சிலை எந்த ஒரு சேதாரம் ஏற்படாமல் கம்பீரமாக இன்றைக்கும் காட்சி தந்து கொண்டிருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாதலம் கன்னியாகுமரி ஆகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வியந்து பார்க்கும் அளவில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வருகின்ற டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய மூன்று தினங்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. விழா சிறப்பாக நடைபெறும் வகையில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த விழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி, திருக்குறள் நூல்கள் அமைக்கப்பட்ட ஒரு கண்காட்சி தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் முன்னேற்பாடு பணிகளை முன் நின்று சிறப்பாக செய்து வருகிறார். நெடுஞ்சாலை துறையின் சார்பில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இன்று துணை முதலமைச்சர் 10 பேருந்துகளில் அய்யன் திருவள்ளுவர் பற்றிய புகைப்படங்கள் ஒட்டிய பேருந்துகளை துவக்கி வைத்தார். அதேபோன்று பெரிய பலூன் மாவட்டத்தின் தலைநகரத்தில் பறக்க விடப்பட உள்ளது. பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை போட்டிகள், பேச்சு போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறும் அரங்கு மற்றும் மேடையினை பார்வையிட்டார். மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட உள்ள இடம், உலக புகழ் பெற்ற ஓவியக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் கைவண்ணத்தில் உருவாக்கப்பட உள்ள மாபெரும் திருவள்ளுவர் மணல் சிற்பம் அமைக்கப்படும் இடத்தினையும், நேரில் பார்வையிட்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


ஆய்வுகளில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், முன்னாள்அமைச்சர் சுரேஷ் ராஜன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சி கனகலெட்சுமி, மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் (சுசீந்திரம்) பிரபா ராமகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல், வட்டார மருத்துவக்குழு உறுப்பினர் பாபு, வட்டார விவசாய குழு உறுப்பினர் தாமரைபாரதி, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *