கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஆலன் அரங்கில் நடந்தது.
2024-2025 சென்ற நிதியாண்டில் 168771 சேமிப்பு கணக்குகளும் 7944 செல்வமகள் சேமிப்பு கணக்குகளும் 14299 மகளிர் மேன்மை சேமிப்பு பத்திர கணக்குகளும் 5362 பொது வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டு உள்ளன. அடல் பென்ஷன் திட்டம் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி திட்டம் உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களில் 8934 சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் இணைந்து உள்ளனர்.
குமரி மாவட்ட வாடிக்கையாளர்கள் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் 178 கோடியும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் 275 கோடியும் காப்பீடு செய்து உள்ளனர். புதியதாக 13000 காப்பீட்டாளர்கள் மேற்குறிப்பிட்ட காப்பீட்டு திட்டங்களில் இணைந்து உள்ளனர்.
ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் மூலம் 179336 பயனாளிகளும் புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் சேவையின் மூலம் 18484 பயனாளிகளும் பயன் பெற்று உள்ளனர்.
அஞ்சல் ஏற்றுமதி மையத்தின் சேவைகள் மூலம் 12 சிறு/குறு தொழில் முனைவோர் பயன்படுத்தி உள்ளனர்.
ஆயுள் காப்பீடு அஞ்சலக சேமிப்பு கணக்கு வணிக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் சேவைகளை பொது மக்களிடம் சென்று சேர்ப்பதில் சிறப்பாக பணியாற்றிய 150 க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
அஞ்சல் சேவை மக்கள் சேவை என்பதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வரும் அஞ்சல் துறையின் தலைசிறந்த ஊழியர்களை பாராட்டும் வண்ணம் ஆண்டு தோறும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதுகளை, கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கண்காணிப்பாளர் செந்தில் குமார் வழங்கினார். அவரது தலைமை உரையில் தங்களது தன்னலமற்ற சேவையின் மூலம் பெருவாரியான மக்கள் பயன்பெறும் வண்ணம் கன்னியாகுமரி கோட்டத்தின் அனைத்து ஊழியர்களும் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழாவில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலக தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் மேற்கு, தக்கலை மற்றும் குழித்துறை உப கோட்ட அதிகாரிகள் உட்பட 250 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.