இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் நடைபெற்ற வட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு மொத்தம் 20 விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பாக, சிறந்த செயல்திறனைக் கொண்ட அஞ்சல் கோட்டங்களை பாராட்டும் வகையில் வட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் மொத்தம் 20 விருதுகளை வென்று, தமிழ்நாட்டிலேயே அதிக விருதுகளை பெற்ற ஒரே கோட்டமாக திகழ்ந்தது.
கன்னியாகுமரி கோட்டம், 3 விருதுகளை இன்சுரன்ஸ் சேவைக்காகவும் 5 விருதுகளை சிறந்த டெலிவரி செயல்திறனுக்காகப் பெற்றது.
மேலும், வணிக மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும் , டாய் அகார் கடித எழுதும் போட்டி, India Post Payments Bank ன் Merchant Onboarding மற்றும் India Post Payments Bank ஜெனரல் இன்சூரன்ஸ் சேவை ஆகியவற்றிற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன
விருதுகளை தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் வழங்கினார்.
இந்த விருதுகளை, கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். அவர் இது குறித்து பேசும் போது, கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் தொடர்ந்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த வெற்றிக்கு காரணமான அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
