கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை விழிப்புணர்வு

Share others

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையின் சார்பில் போதை பொருட்கள்
பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல்
கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் முன்னிலையில், போதை
பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை எடுத்து, பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதை
வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
பிரச்சாரத்தினை துவக்கி வைத்ததோடு போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினையும்
ஏற்றுக்கொண்டார்கள். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில்
பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மைதானத்தில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற
போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி
அடைகிறேன்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
வருவாய்த்துறை, காவல்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
உட்பட சுமார் 11-க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டு
போதை பொருட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்
உட்கொள்பவர்களை கண்டறிந்து அவர்கள் அப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு ஆலோசனைகள்
வழங்கப்படுவதோடு, போதைப்பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களை கொண்டு போதைப்பொருட்கள்
உட்கொள்வதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று தனியார் பள்ளிகள், அரசு
மற்றும் தனியார் கல்லூரிகளிலும் குழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில் வருகை தந்துள்ள மாணவ, மாணவியர்கள் தங்களுடைய சக நண்பர்கள்,
வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளானவர்களாக இருப்பின் அவர்கள்
குறித்து, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்து அப்பழக்கத்திலிருந்து அவர்கள் விடுபட
வழிவகை செய்வதோடு, போதைப்பொருள் விற்பவர்கள் மற்றும் அதற்கு அடிமையானவர்கள் குறித்து
தகவல் தெரிந்தால் 7010363173 என்ற கட்டணமில்லா கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு
விவரங்களை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு நமது மாவட்டத்தை இளைஞர்கள்
மற்றும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதை
இல்லாத குமரி மாவட்டமாக மாற்றிட ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், பேசினார்.


அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், ஆகியோர் சுமார் 2000-க்கும் அதிகமான
மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை
பார்வையிட்டதோடு, போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி முதல்வர் நடராஜன்,
இயக்குனர் அருள்சன் டேனியல், அகஸ்தீஸ்வர் வட்டாட்சியர் ராஜேஷ் மறுவாழ்வு மைய
இயக்குநர் அருள்ஜோதி உட்பட ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *