கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்
பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா
கண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில்
எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவக்கி வைத்து,
பேசுகையில்:-
தமிழ்நாடு அரசானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்
புத்தகத்திருவிழா கண்காட்சி நடத்த வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில்
இன்று (17.2.2024) முதல் வருகின்ற 27.2.2024 வரை புத்தக கண்காட்சியில் பொது
அறிவு, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது, வரலாற்று புத்தகங்கள், இலக்கியங்கள்,
கவிதை, நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் சுமார் 100-க்கும்
மேற்பட்ட அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
நமது இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ,
மாணவியர்களிடையே புத்தகம் வாசிப்பு திறனை அதிகப்படுத்த வேண்டுமென்பதற்காகவும்,
வள்ளுவர் கூறியது போல் அனைவரும் புத்தகங்களை படிப்பதோடு மட்டுமல்லாது, அதனை
முழுமையாக புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும், படித்தவை என்றென்றும் உங்கள்
மனதில் நிற்க வேண்டும்.
மேலும், சரித்திரம் படைத்த தலைவர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில்
புத்தகங்களை வாசிக்கின்றவர்களாக இருந்ததால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது.
இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாம் அனைவரும் புத்தகம் வாசிக்கும்
பழகத்தினை மறந்து வருகின்றோம். இந்த புத்தக கண்காட்சி வாயிலாக உங்கள்
அனைவருக்கும் நான் தெரிவிப்பது, ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிவுசார்ந்த புத்தகங்களை
வாசிப்பதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென
கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், பேசினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் புத்தக கண்காட்சியில்
அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் அதிகமான புத்தக கண்காட்சி அரங்குகளை
பார்வையிட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து ஆதார்ஸ் வித்யா பள்ளியில் 7-வது படிக்கும் மாணவி
ஹன்சி மை லிட்டில் லைவ்லி இன் லவ்லி லைப் என்ற நூலை எழுதி வெளியிட்டமைக்காக
மாணவியை பாராட்டியதோடு. மாநில அளவில் நடைபெற்ற கலா உற்சவா போட்டியில்
வெற்றி பெற்ற அபிதா சந்திரசேகரையும் மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர் பாராட்டினார்.
இந்த கண்காட்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, வருவாய்
கோட்டாட்சியர்கள் காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி
(பத்மநாபபுரம்), திட்ட இயக்குநர்கள் பாபு (மகளிர் திட்டம்), பீபீஜாண்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாராயணன், மாவட்ட
வழங்கல் அலுவலர் விமலா ராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
பாலதண்டாயுதபாணி, உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா, மாநகர
பொறியாளர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்
ஜவஹர், உசூர் மேலாளர் ஜீலியன் ஹீவர், வட்டாட்சியர்கள் அனில் குமார்
(அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), தனி வட்டாட்சியர் (ச.பா.தி)
சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், பள்ளி கல்லூரி மாணவ
மாணவியர்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.