கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 20 ம் தேதி முதல் கனிமவள சரக்கு வாகனங்கள் செல்ல நேரம் நிர்ணயம்

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் கன்னியாகுமரி
மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் ஓடுவதை முறைப்படுத்துவது
தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுந்தரவதனம் முன்னிலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துறை
சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு, தெரிவிக்கையில் –
கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை
தடுக்கும் பொருட்டும், கனிம வளம் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களின் இயக்கத்தை
முறைப்படுத்துவது தொடர்பாகவும், வரும் செவ்வாய்க்கிழமை 20.2.2024 காலை முதல்
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிம வள சரக்கு காலி
வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க
அனுமதிக்கப்படுகிறது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள்
காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர
பிற நேரங்களில் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அதிவேகமாக மற்றும் மது போதையில்
வாகனம் ஓட்டும் ஓட்டுநர் மீதும் அவரை அனுமதிக்கும் உரிமையாளர் மீதும் மோட்டார்
வாகன சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி வாகனங்களை கைப்பற்றி
தேவைப்படின் சிறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கனிமவளத்துறையால் வழங்கப்படும்
அனுமதிச்சீட்டை முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
மேற்குறிப்பிட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து குவாரி உரிமையாளர்கள், கனரக
வாகன உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினருடனும் கலந்துரையாடப்பட்டது. மாவட்ட
நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு
வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்
பாலசுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியர்கள்
காளீஸ்வரி
(நாகர்கோவில்), தமிழரசி (பத்மநாபபுரம்), நாகர்கோவில் வட்டார போக்குவரத்து
அலுவலர் சசி, வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து
கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *