கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு ,கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த 12 சிவ தலங்கள் அமைந்து உள்ளது . இந்த சிவாலயங்களில் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சிவாலய ஓட்டம் நடக்கிறது. நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கடந்த ஏழு தினங்கள் முன்பு மாலை அணிந்து விரதம் துவக்கினர் . இவர்கள் காலையிலும் மாலையிலும் இரண்டு நேரம் குளித்து சிவாலயங்களில் சென்று சிவ நாமம் பாடி விரதம் இருந்தார்கள். இந்த விரத நேரத்தில் சைவ உணவே சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிட தகுந்ததாகும். மேலும் இவர்கள் நேற்று (6 ம் தேதி ) ஏகாதசி விரதம் இருந்தனர் ஏகாதசி விரதத்தில் தீயினால் சுட்ட பொருட்கள் சாப்பிடமாட்டார்கள் நுங்கு, இளநீர்,பழங்கள் போன்ற பொருள்களை சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ள கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதி பக்தர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இன்று (7 ம் தேதி) முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலுக்கு வர துவங்கினர் .
ராமாயணம் மகாபாரதம் காவியத்தோடு தொடர்புடைய திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து இன்று (7 ம் தேதி) காலையில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் ஓடத் துவங்கினார்கள்.
பிற்பகல் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது.
/
இந்த பக்தர்கள் விசிறி விபூதி பொட்டலத்துடன், முஞ்சிறையில் இருந்து காப்புக்காடு , சென்னித்தோட்டம் ,பல்லன்விளை, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோயிலுக்கு சென்று தரிசித்தனர். திக்குறிச்சியில் இருந்து கிழக்கு நோக்கி அருமனை களியல் வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திற்ப்பரப்பு வீரபத்திரர் கோயிலையும், அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை கோயிலையும், திருநந்திக்கரையில் இருந்து குலசேகரம் வழியாக 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொன்மனை மகாதேவர் கோயிலையும் அங்கிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் பன்னிப்பாகம் கோயிலையும் தரிசிப்பர்.
அங்கிருந்து கிழக்காக 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்குளம் நீலகண்டசுவாமியை தரிசித்து அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேலாங்கோடு கோயிலுக்கு சென்று வழிபடுவர். மேலாங்கோட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவிடைக்கோடு சடையப்பர் கோயில் தரிசிப்பர். அங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவிதாங்கோடு கோயிலிலும், அங்கிருந்து அமராவதி கோழிப்போர்விளை வழியாக 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பன்றிகோடு மகாதேவர் கோயிலில் தரிசித்து அங்கிருந்து பள்ளியாடி வழியாக 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் ஓடியே சென்று பக்தர்கள் தரிசிக்கின்றனர். அங்கு நாளை ( 8 ம் தேதி) இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
சுமார் 110 கிலோ மீட்டர் சுற்றளவு அமைந்து உள்ள இந்த பன்னிரு சிவாலயங்களையும் ஓடி தரிசித்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொது மக்கள் சார்பில் சுக்கு நீர் ,கடலை, பானகம் ,மோர் ,கஞ்சி பழம் போன்ற உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இன்று முதல் நாளை வரை இந்த 12 சிவாலயங்களையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், டூரிஸ்ட் பஸ்கள், ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்று தரிசிப்பார்கள். மொத்தத்தில் கன்னியாகுமரி மாவட்ட 12 சிவாலயங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
சிவாலய ஓட்டம் மற்றும் சிவராத்திரி விழா முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை (8 ம் தேதி) உள்ளுர் விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் அறிவித்திருந்தார். 12 சிவாலயங்கள் மற்றும் வழிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.