கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற
இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான துறை அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
தலைமையில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு
தெரிவிக்கையில்-
இந்தியத்தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி பாராளுமன்ற
மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி
நடைபெற உள்ளதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (16 ம் தேதி) முதல் அமலுக்கு
வருகிறது.
அதனடிப்படையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து சுவர்
எழுத்துக்கள், சுவரொட்டிகள் மற்றும் காகிதங்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள்,
கொடிகள் போன்றவை தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட நேரத்திற்குள்
அகற்றப்பட வேண்டும்.
மேலும் பொது சொத்துக்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், விமான
நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், மின்சாரம் மற்றும்
தொலைபேசி கம்பங்கள், நகராட்சி மற்றும் உள்ளுர் அமைப்புகளின் கட்டடங்கள் போன்ற
பொது இடங்களிலும் உள்ள சுவர் எழுத்து, சுவரொட்டிகள் மற்றும் காகிதங்கள் அல்லது
ஏனைய யாதொரு வகையிலான சேத நடவடிக்கைகள், விளம்பரப் பலகைகள், பதாகைகள்,
கொடிகள் போன்ற வகையிலான அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட நேரத்திற்குள் அகற்றப்பட
வேண்டும்.
தனியார் சொத்தை சேதப்படுத்துதல் தனியாருக்குச் சொந்தமான இடத்தில்
வைக்கப்பட்டு உள்ள அனைத்து அனுமதியற்ற அரசியல் விளம்பரமும் உள்ளூர்
சட்டத்திற்கு உட்ப்பட்டும் நீதிமன்றத்தின் ஆணைக்கு உட்ப்பட்டும் ஏதேனும் அரசியல் விளம்பரம்
தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருப்பின், அவ்விளம்பரமும் ஆணையத்தால் தேர்தல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து (72 மணி நேரத்திற்குள்) அகற்றப்பட வேண்டும்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள விதிமுறைகளின் படி,
பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது
பிரச்சாரத்திற்காக, தேர்தல் அல்லது தேர்தல் தொடர்புடைய பயணத்திற்காக அரசியல் கட்சி,
வேட்பாளர் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய யாதொரு நபரும் அலுவலக
வாகனத்தை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய மாநில அரசின் அலுவலக வலைதளத்தில் இருந்து அரசியல் சார்ந்த
பொறுப்பாளர்களின் புகைபடத்தை மறைப்பதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும். நடைபெற உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு
சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமூகமாக வாக்களித்திட அனைத்து துறை அலுவலர்கள்,
அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, , ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள்
சுகிதா (பொது), செந்தூர் ராஜன் (தேர்தல்), நாகர்கோவில் வருவாய்
கோட்டாட்சியர் காளீஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்
சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட வழங்கல்
அலுவலர் சுப்புலெட்சுமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் சாந்தி உட்பட
துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.