கன்னியாகுமரி அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து – வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி அருகில் அமைந்து உள்ள மாவட்ட வனத்துறை அலுவலக வளாகத்தில், அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) கதான்ஷூ குப்தா, , முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் அரசு ரப்பர் கழக தலைவர் கவுஷல், நிர்வாக இயக்குநர் (அரசு ரப்பர் கழகம்) கிருபாசங்கர், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், ஆகியோர் முன்னிலையில், நடந்தது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ரப்பர் கழக அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், மலைவாழ் கிராமமக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் வனத்துறைக்குரிய முன்னாள் அரசு ரப்பர் தோட்டத்தில் இருந்து 4785.70 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ரப்பர் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து 1.10.1984 அன்று தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு ரப்பர் கழகத்தில் தற்போது சுமார் 3985.694 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சிரிமாவோ சாஸ்திரி உடன்படிக்கையின்படி இலங்கையில் இருந்து தமிழகம் வருகைப்புரிந்த புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல், ரப்பர் மற்றும் இதர தோட்டங்கள் வாங்குதல் மற்றும் நிர்வகித்தலாகும்.
அரசு ரப்பர் கழகம் தற்போது 4 கோட்டங்கள் மற்றும் ஒரு தொழிற்கூடம் கொண்டு செயல்பட்டு வருகிறது. கீரிப்பாறை கோட்டத்தில் 792.300 பரப்பளவு (ஹெக்டேர்), மணலோடை கோட்டத்தில் 968.815 பரப்பளவு (ஹெக்டேர்), சித்தார் கோட்டத்தில் 1113.900 பரப்பளவு (ஹெக்டேர்), கோதையார் கோட்டத்தில் 1110.679 பரப்பளவு (ஹெக்டேர்) கொண்டது.
2021-2022-ம் வருடம் 398702 எண்ணம் ரப்பர் மரங்களில் டி2/டி3 துறையில் பால்வடிப்பு செய்யப்படுகிறது. இதில் 54 சதவீதம் பால்வடிப்பு மரங்கள் வயது முதிர்ந்து 38 வருடங்களுக்கு மேற்பட்டவையாகும். இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு மரம் ஒன்றுக்கு சராசரியாக வயது முதிர்ந்த ரப்பர் மரங்களில் இருந்து 32 கிராம் ரப்பர் பால், இளமரங்களில் இருந்து 68 கிராம் ரப்பர் பால், கன்னியாகுமரரி மாவட்ட ரப்பர் மரங்கள் 54 கிராம் ரப்பர் பால் கிடைக்கும். அரசு ரப்பர் கழகத்தில் வயது முதிர்ந்த ரப்பர் மரங்கள் அதிகமாக இருப்பதால் ரப்பர் உற்பத்தியின் அளவு வருடாவருடம் குறைந்து கொண்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்கு வயது முதிர்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வீரியம் மிகுந்த ரப்பர் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலத்தின் தன்மையை பொறுத்து, ஒவ்வொரு ரப்பர் மரமும் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை பால்வடிப்பு செய்யப்படுகின்றது. அதிகாலையில் மரத்தின் பட்டைகளில் பால்வடிப்பு செய்யப்பட்டு அவை உலர் தன்மையில் எடை போடப்பட்டு தொழிற்கூடத்திற்கு அனுப்பப்படுகிறது. சேகரம் செய்யப்பட்ட ரப்பர் பாலை பதப்படுத்த கீரிப்பாறை தொழிற்கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கீரிப்பாறை தொழிற்கூடத்தில் உற்பத்தி செய்யப்படும் செனக்ஸ் (டர்பால் 60 சதவீதம் உலர் ரப்பர் கொண்டது இவற்றை பயன்படுத்தி அறுவை சிகிச்சை கையுறைகள், ஆணுறைகள், பலூண்கள், ரப்பர் பேன்டுகள், டயர்கள் தயாரிக்கப்படுகிறது. ஒட்டுக்கறை (செனக்சின் துணை பொருள்) தரம் குறைந்த காலணிகள் தயாரிக்கப்படுகிறது. இ.பி.சி மின் விசிறி, பெல்ட், கைச்சிள் டியூப், ரீறீடிங் தயாரிக்கப்படுகிறது. தற்சமயம் அரசு ரப்பர் கழகத்தில் உற்பத்தி செய்வதில் அதிகமாக பதப்படுத்தும் பால் இடம் வகிக்கிறது. இவை உற்பத்தி செய்யப்படும் மற்றும் ரப்பர் இ.பி.சி மற்றும் ஸ்கிம் கிரேப்பினைவிட அதிகம் விலைக்கு விற்பனையாகிறது.
ரப்பர் விற்பனையானது போட்டி மிகுந்த அதிகம் பிரச்சனைகள் உள்ள ஒன்றாகும். அதனை எதிர்பார்த்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கு மாற்றாக பெட்ரோலியத்தில் இருந்து மாற்று ரப்பராக செயற்கை ரப்பர் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ரப்பர் கழகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றும் தயாராக உள்ளது. இன்றைய கலந்தாய்வு கூட்டத்தில் ரப்பர் கழக அலுவலர்களிடம் ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், 2019 முதல் ரப்பர் மரம் ஒட்டுவதற்கு அனுமதி வழங்கபடவில்லை என ஒப்பந்ததாரர்கள் தங்களின் கோரிக்கையினை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கையின் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மலைபகுதி கிராமங்களில் வசிக்கும் மலை வாழ்மக்களின் பிரதிநிதிகள், மலை கிராமங்களில் வசிக்கும் கிராமமக்கள் கொடிய விலங்குகள் மற்றும் பாம்பு உள்ளிட்ட விஷத்தன்மை கொண்ட பிராணிகள் மூலம் உயிர் பலி ஏற்படுவோர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ரப்பர் கழகத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக முதுநிலை கணினி மேலாளர் கருணாநிதி உட்பட அரசு ரப்பர் கழக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.