பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 388 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மக்களுடன் முதல்வர் முகாம், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.
மேலும் தகுதியற்ற மனுக்கள் அனைத்திற்கும் உரிய காரணங்களை மனுதாரர்களுக்கு தெளிவாக விளக்கி பதில் அளிக்க வேண்டும். மக்கள் தொடர்பு முகாம்களுக்கு வரும் பொதுமக்களிடம் இருந்து அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கோரிக்கை மனுக்களை பெறும் போது, அவர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிவதோடு, அவர்களின் மனுக்களுக்குரிய துறையினை எடுத்துக்கூறி, அக்கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்களது துறை சார்ந்த மனுக்களில் குறிப்பாக நலத்திட்டங்கள், நலஉதவிகள், கடனுதவிகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தால் அவற்றினை குறித்த விளக்கங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல் காதர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கனகராஜ், உயர் அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.