கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து மாவட்ட
ஆட்சியாளரின் உத்தரவின் பேரில் மீன் வள துறை இயக்குநர் சின்னக்குப்பன்
மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர்
செந்தில்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் மீன் சந்தைகள் மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆய்வு
செய்யப்பட்டன.
ஆய்வு விபரம் பின்வருமாறு: அகஸ்தீஸ்வரம் வட்டாரம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் மற்றும்
மீன்வளம் மற்றும் ஆராய்ச்சி துறை கண்காணிப்பளார் ருக்மணி ஆகியோர்
கன்னியாகுமரியில் அழகப்பபுரம், மைலாடி, கொட்டாரம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்
சந்தைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 15 கிலோ கிராம் அழுகிய மீன்கள்
கொட்டி அழிக்கப்பட்டது.
நாகர்கோவில் நகராட்சி பகுதி 1 & II உணவு பாதுகாப்பு அலுவலர்
சங்கரநாராயணன் மற்றும் நாகர்கோவில் நகரில் உள்ள வடசேரி மீன் சந்தை, இருளப்பபுரம்
மீன் சந்தை மற்றும் கணேசபுரம் மீன் சந்தை ஆகிய 28 மீன் விற்பனை செய்யும் கடைகளில்
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 210 கிலோ கிராம் அழுகிய மீன்கள் கொட்டி
அழிக்கப்பட்டது. தக்கலை வட்டாரம் மற்றும் கிள்ளியூர் வட்டார (பொறுப்பு) உணவு பாதுகாப்பு அலுவலர்
பிரவின் ரகு மற்றும் மீன்வளம் மற்றும் ஆராய்ச்சி ஆய்வாளர்கள்
லிபின் மேரி மற்றும் சனல்குமார் ஆகியோர் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம்
மற்றும் வெட்டை பகுதி மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது அழுகிய மீன்கள் கண்டறியப்படவில்லை.
திருவட்டார் வட்டாரம் மற்றும் மேல்புறம் வட்டார (பொறுப்பு) உணவு பாதுகாப்பு அலுவலர்
நாகராஜன் மற்றும் மீன்வள ஆய்வாளர்கள் அகிலா மற்றும்
ஷாமிலி ஆகியோருடன் ஆற்றுர் மற்றும் மேல்புறம் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை
செய்யும் கடைகளை ஆய்வு செய்ததில் சுமார் 12 கிலோ கிராம் அழுகிய மீன்கள் பறிமுதல்
செய்து அழிக்கப்பட்டது.
குளச்சல் நகராட்சி மற்றும் குருந்தன்கோடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்
ரவி மற்றும் மீன்வள ஆய்வாளர்கள் மேரி சிமிலா மற்றும் சந்தோஷ்
ஆகியோருடன் முட்டம் பகுதிகளில் உள்ள மீன் பிடி துறைமுகம் ஆய்வு
செயயப்பட்டது. ஆய்வின் போது அழுகிய மீன்கள் கண்டறியப்படவில்லை.
மேலும் மீன்வளத்துறையினர் ஆய்வுக்காக 6 மீன் உணவு மாதிரிகள் சேகரித்து சென்றனர்.