
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களின் மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கை மற்றும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு மற்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் தினமும் பொதுமக்களின் புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பெற்று அதன் மீது விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் 8122223319 என்ற எண் மூலம் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை நேரடியாக பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள பொது கருத்து மையத்தின் செயல்பாட்டினை தொடங்கி வைத்து பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணையின் திருப்தியை கேட்டறிந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்த பொது கருத்து மையம் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 7708239100, 6385211224 எண்களின் மூலம் இந்த பொது கருத்து மையத்தில் இருந்து பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை குறித்த கருத்துக்கள் கேட்கப்படும். பொதுமக்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் மனுக்கள் மீதான விசாரணை கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். பொதுமக்கள் 7708239100 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பிலும் தங்களது தகவல்களை அனுப்ப இயலும். மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எத்தனை நாட்களில் தொடங்குகிறது, விசாரணையின் முடிவு, விசாரணையானது தகுந்த சட்ட வழிமுறைகளை பின்பற்றி நடந்துள்ளதா என்பதை பற்றி மனுதாரரிடம் கருத்து கேட்கப்பட்டு விசாரணையில் திருப்தி இல்லை எனில் மற்றொரு விசாரணை அதிகாரியை வைத்து மறு விசாரணைக்கு உத்தரவிடப்படும். மேலும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மற்றும் போதை பொருட்கள் தொடர்பான தகவல்களை இந்த எண்களில் பகிர்ந்து கொள்ளலாம். பொதுமக்களின் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
காவலர்கள் குறைகளை பகிர்ந்துகொள்ள செல்போன் எண் அறிமுகம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை தினமும் காலை 11 மணிக்கு நேரடியாக கேட்டு வருகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க இயலாமல் தூரமான பணியிடங்களில் பணிபுரியும் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி செல்போன் எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். மேலும் இதற்கு மாவட்ட காவல்துறை தனியாக ஒரு செல்போன் எண்ணை (7540004651) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியையும் காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
இந்த பொது கருத்து மையமானது 24 மணி நேரமும் செயல்படும். மாவட்ட பொதுமக்களின் காவல்துறை தொடர்பு மற்றும் பொதுமக்களின் குறைகளை களைவதற்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.