கன்னியாகுமரி மாவட்டத்தில் 21.11.2025 முதல் 24.11.2025 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்கவும், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது, மழைக்காலங்களில் நீர்நிலைகளில் நீரின் வரத்து அதிகமாக வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்க செல்லவேண்டாம் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து 24X7 முழு நேரமும் சுழற்சி முறையில் அரசு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 231077 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு பொது மக்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும், மேலும் தமிழக அரசினால் வடிவமைக்கப்பட்டு உள்ள செயலியான தமிழகம் அலர்ட் என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியில் நாம் இருக்கும் இடத்தின் வானிலை, மின்னல், மழைப்பொழிவு ஆகிய விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
