
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், முன்னிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 36 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 18 வாக்குசாவடிகளும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குசாவடிகளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 23 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 10 வாக்கு சாவடிகளும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 35 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 137 பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக, கன்னியாகுமரி சட்டன்ற தொகுதிக்கு உட்பட்ட தடிக்காரன்கோணம் கிறிஸ்தவ நல மேல்நிலைப்பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி, மாதவாலயம் அரசு மேல்நிலைப்பள்ளி, லீபுரம் அரசு தொடக்கப்பள்ளி, ஒற்றையான்விளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, மேலகிருஷ்ணன்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி, அத்திகாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை பணியமர்த்துவது குறித்து காவல் காண்காணிப்பாளருடன் கலந்தலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதை தேர்தல் பணியில் ஈடுப்பட்டு உள்ள அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்கள் உறுதி செய்திட வேண்டும்.
வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்குடை, மின்சாரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பதட்டமான அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல் குமார், கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தோவாளை வட்டாட்சியர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
