கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு தங்கப்பதக்கம்

Share others

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்
ஸ்டாலின் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்படுத்தி, முதலிடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனாவுக்கு தங்க பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பயனாளிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தும், சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் 50 மின் ஆட்டோக்களை மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 100 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து பெண்குழந்தைகள் பாலின விகிதத்தினை உயர்த்தியதில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தங்கப்பதக்கம் பெற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டமானது 2022 – 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்துதல் ஆகும். மேலும் தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் சட்டங்களையும் நலத்திட்டங்களையும் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கி, பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் தொடர்புடைய துறைகளுடன் இணைந்து பெண் குழந்தைகளின் பாலின விகித்தை உயர்த்துவதற்காக பல்வேறு வகையான நிகழ்வுகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் நடத்தப்பட்டன.
குறிப்பாக அரசு மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், அனைத்து ஸ்கேன் மைய உரிமையாளர்களுக்கு பிசிபிஎன்டிறி சட்டம் குறித்த கூர்நோக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரத்துறை மூலம் அனைத்து ஸ்கேன் மையங்களிலும் பாலினத் தேர்வை தடை செய்யும் சட்டத்தின்படி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதந்தோறும் குழந்தைகளின் பாலின விகிதத்தை கண்டறியும் வகையில் அனைத்து அரசு மருத்துவனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண், பெண் பிறப்பு பாலின தகவல் பலகையானது நிறுவப்பட்டு உள்ளது. அரசு சிறுபான்மையினர் மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவியர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சியானது காவல் துறையின் மூலம் வழங்கப்பட்டது. இணையவழி குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆறுகாணியில் உள்ள உண்டு, உறைவிடப் பள்ளி பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை திறன் பயிற்சியும் மற்றும் அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியும் கோணம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வழங்கப்பட்டது. அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி, மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சி மற்றும் கல்வி சுற்றுலாவானது பள்ளி கல்வித்துறையின் மூலம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் மூலம் 1000 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மற்றும் தொற்றா நோய்கள் குறித்த முகாம்கள் நடத்தப்பட்டது.
அரசு பள்ளி ஆசிரியர்கள், காவல் துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலர்கள், குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், கிராம அளவில் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாலின விகிதம் குறித்த நோக்குநிலை மற்றும் உணர்திறன் பயிற்சியானது நடத்தப்பட்டது. பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைவாக காணப்படும் பகுதிகளில் கலைக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெண் குழந்தைகளையும் பெண்களையும் பெருமைப்படுத்தும் வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினம், சர்வதேச பெண் குழந்தைகள் தினம், சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. குடும்பங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது. அக்டோபர் -2ம் தேதி நடத்தப்பட்ட கிராம சபா கூட்டத்தில் 800 பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இந்நாள்வரை 2000-த்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மக்களிடையே பெண் குழந்தைகளுக்கு எதிரான மனப்பாங்கினை களையும் பொருட்டு சிறப்பாக செயலாற்றும் மாவட்டத்திற்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்துடன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநில பெண் குழந்தைகள் தினமான பிப்ரவரி 24, அன்று மாநில தேர்வுக்குழுவால் கன்னியாகுமரி மாவட்டமானது பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய முதல் மாவட்டமாக தேர்வுசெய்யப்பட்டு, சர்வதேச பெண்கள் தினமான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தங்கப்பதக்கம் வழங்கி பெருமை சேர்ந்தமைக்காக கன்னியாகுமரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *