கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள்
அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்
பள்ளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது என்று கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
இந்திய அஞ்சல் துறைக்கும், தமிழ்நாடு பள்ளி கல்வி துறைக்கும் கடந்த மே 31-ஆம் தேதி அன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகையை வரவு வைக்கும் வகையில் பயனீட்டுத் தொகையைப் பெற தகுதி உள்ள அனைத்து மாணவருக்கும் எந்தவித குறைந்தபட்ச தொகையும் இல்லாமல் பூஜ்ஜியம் தொகையில் அவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு மற்றும் ஐபிபிபி கணக்கு தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த சேமிப்பு கணக்கை துவங்க ஆதார் அட்டை மாணவர் அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பெற்றோரின் கைப்பேசி அவசியமாகிறது. சில மாணவர்களுக்கு கணக்கு தொடங்கும் போது அவர்களது ஆதார் எண்ணில் கைரேகை மொபைல் எண் அப்டேட் இல்லாததால் அந்த கணக்கு தொடங்குவதில் சிரமம் ஏற்படுவதாக அறியப்பட்டதை தொடர்ந்து. நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும் அருகில் உள்ள சில அடையாளப்படுத்தப்பட்ட துணை அஞ்சலகங்களிலும் இந்த ஆதார் மையம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறும் பொருட்டு ஆதாரில் பயோ மெட்ரிக் மற்றும் மொபைல் எண்ணை அப்டேட் செய்து கல்வித் தொகையை பெற அஞ்சலகங்களில் கணக்கு தொடங்க விரும்புவோர் ஜூலை 15ஆம் தேதிக்குள் வரவேண்டும் .
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.