காசநோய் ஒழிப்பு குறித்து 100 நாள் வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு குறித்து 100 நாள் வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
காசநோய் ஒழிப்பு நடவடிக்கையின் பொருட்டு நாடு முழுவதும் 100 நாட்கள் காசநோய் கண்டறியும் முகாம் நடத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாமின் மூலம் பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொகையான 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயாலிசிஸ் நோயாளிகள், எச்.ஐ.வி நோயாளிகள், பழங்குடியினர் மற்றும் ஊட்டச்சத்து குறைவுள்ளவர்களுக்கு காசநோய் பரிசோதனை இன்று முதல் முதல் மார்ச் 23-3-2025-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து காசநோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு செய்தியை வழங்கி, காசநோய் இல்லா குமரி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சகாய ஸ்டிபன்ராஜ், துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) சுபைர் ஹசன் முகமது கான், மாவட்ட சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் (தொழுநோய்) கிரிஜா, துணை இயக்குநர் (குடும்ப நலத்துறை) ரவிக்குமார் மற்றும் பல அரசு அதிகாரிகள், காசநோய் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.