
கன்னியாகுமரியில் காய், கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, ஆகியோர் பார்வையிட்டார்கள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்ஒருபகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யன் திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவு அருகில் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் காய் மற்றும் கனி வகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவிக்கையில் –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்ற அனைவரும் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமாக சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் கல்லூரி மாணவ மாணவியர்கள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள், துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், மலை வாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்டவர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதல் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகன பிரச்சாரங்கள், தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள், சுவர் ஓவியங்கள், தேர்தல் தொடர்பான பல்வேறு போட்டிகள், மணல் சிற்பங்கள், கிராமிய கலைகள், பரமபதம், ரங்கோலி, கோலப்போட்டி, கபடி, இசை நாற்காலி போட்டி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் கன்னியாகுமரி மாவட்டம் கல்வி, இயற்கை வளம் உள்ளிட்டவற்றில் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்வது போல் வாக்களிப்பதிலும் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கே ஆகும்.

அந்த வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவு அருகில் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, தர்பூசணி, பூசணிக்காய், முலாம் பழம், அலங்கார பூச்செடிகள், காக்டெக்ஸ் செடி உள்ளிட்ட காய், கனி மற்றும் செடி வகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியானது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாக்குரிமை பெற்ற அனைவரும் வரும் 23-ம் தேதியன்று மறவாது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதோடு கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தோட்டக்லைத்துறை துணை இயக்குநர் நக்கீரன், துறை அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா.
