காரங்காடு கிளை நூலகத்தில் தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், வரலாறு அறிவியல் இலக்கியம் என சுமார் 30 ஆயிரம் வரை புத்தகங்கள் உள்ளன. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இளைஞர்கள் இணையதளத்தை பயன்படுத்தும் வகையில் வைபை வசதியுடன் இலவச கணினி வசதியும் உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்வதால் கூடுதல் இட வசதி வேண்டும் என வாசகர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நூலகத்தில் முதல் தளம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொது நூலக கட்டிடம் 2023-24 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நூலகம் காரங்காடு கிராம நூலக இணைப்பு கூடுதல் மேல்மாடி கட்டிடம் கட்ட நிதி ரூ. 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதே போன்று மாடத்தட்டுவிளை, கலைநகர், பெருவிளை, மேலதாராவிளை, வீராணி, குளச்சல், பயணம், வெள்ளிக்கோடு, சரவணந்தேரி, கன்னியாகுமரி, படுவாக்கரை, அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், பேயன்குழி, கிருஷ்ணாபுரம், கடியபட்டணம், பூட்டேற்றி, கோவளம், புத்தன்துறை ஆகிய இடங்களிலும் புதிய நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக புதிதாக கட்டப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட நூலக ஆணை குழுவின் கீழ் இயங்கும் காரங்காடு உள்ளிட்ட 21 நூலகங்களின் புதிய மற்றும் இணைப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் நடந்த விழாவை தொடர்ந்து அவை பயன்பாட்டிற்கு வந்தது.
காரங்காடு கிளை நூலக புதிய முதல் மாடி கட்டிடத்தில் நடந்த நன்றி விழாவிற்கு காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி சுஜின் தலைமை வகித்தார். குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி (கி.ஊ) பத்மா, புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை றோஸ்லெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் கிறிஸ்துராஜன் வரவேற்றார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. மாவட்ட நூலக அதிகாரி (பொ) மேரி, காரங்காடு ஆலய பங்குப் பேரவை துணைத் தலைவர் ஜெயசீலன், செயலாளர் மேரி ரெக்சலின், பொருளாளர் ஜெரின் பிரகாஷ், காரங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட வாசகர்கள் மாணவர்கள் பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாசகர் ராஜசேகர் நன்றி கூறினார்.