கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட கால்வாய்கள், தாழ்வான பகுதிகள் மற்றும் சானல் பகுதிகளை – மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட கால்வாய்கள், சானல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக விவசாய நிலங்கள், அணைகட்டுகள், கால்வாய்கள், சானல்கள் உள்ளிட்டவைகள் பாதிப்படையாதவாறும், வெள்ளப்பெருக்கினால் சேதம் அடையமால் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்தததோடு, தென்மேற்கு பருவமழையின் போது அப்பகுதிகள் அதிகளவு பாதிப்பு அடையாமல் இருக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக தோவாளை வட்டம் திருப்பதிச்சாரம் ஊராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி, ஈசாந்தி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நங்காண்டி, தெரிசனங்கோப்பு சந்திப்பு, ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கல்விளாகம் சானல் ஆகிய பகுதிகள் தாழ்வான பகுதியாக காணப்படுகிறது. எனவே பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் உட்புகுந்தால் அவர்களை தற்காலிக தங்கும் முகாம்களில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுபோன்று வீராணமங்கலம் பகுதியில் உள்ள புத்தன் கால்வாய், ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கொண்டான் அணை, திருவட்டார் வட்டம் சுருளக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்புலி அனந்தனார் சானல், செல்லந்திருத்தி சானல் பிரிவு கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டதோடு, கடந்த பருவமழையின் போது பாதிக்கப்பட்ட அணைக்கட்டுகள், சானல்களின் மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளதா என்பதையும், மதகுகள் நல்ல முறையில் இயங்குகிறதா என்பதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அணைக்கட்டுகள், சானல் பகுதிகளிலும் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கால்வாய்கள், ஓடைகள், வடிகால்களில் புதர்கள் மண்டியிருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும், வடிகால் பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் புகாமல் இருக்க மணல் மூடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய்கள் பரவமால் இருக்க ப்ளீச்சிங் பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதையும் கேட்டறியப்பட்டதோடு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதோடு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
ஆய்வுகளில் வட்டாட்சியர்கள் கோலப்பன் (தோவாளை), புரந்தரதாஸ் (திருவட்டார்), உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.