சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

Share others

கன்னியாகுமரி சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் வாகனத் துறையில் உலகளாவிய சிறந்த நிறுவனங்களான ஹூண்டாய், போர்டு, டாடா மோட்டார்ஸ், மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற சிறந்த வாகன பிராண்டுகளுக்கான பிரேக்குகள், சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டங்களை தயாரித்து வழங்கும் மாண்டோ ஆனந்த் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு முதல் வருடத்திற்கு ரூ.16,500 உதவித்தொகையோடு கூடிய டெக்னீஷியன் டிரெய்னி பணியிடமும், மேலும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன் 10,000 சேவை விருதோடு இயக்க பொறியாளர் பதவிகளுக்கு முன்னேறலாம். 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் அல்லது புரொடக்ஷன் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்து, அரியர் இல்லாமல் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பைத் தொடர ஆர்வமுள்ள டிப்ளமோ மாணவர்களுக்காக ஹெச்எல் மண்டோ பிரைவேட் லிமிடெட் நிதியுதவி செய்யும் திட்டத்தில் உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ள மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட 77 பேருக்கு பணிஆணை வழங்கப்பட்டது. அதற்கான சிறப்பு முயற்சியாக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பணியாணை பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன். மேலும் மற்றவர்கள் தொடர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். வருங்காலங்களில் உங்களுக்கான வாய்ப்புகள் அமைத்துத் தரப்படும். இந்த பணி ஆணை என்பது முடிவு அல்ல. துவக்கமே. இதனை ஆதாரமாக எடுத்து வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதே உங்கள் சாதனையாக இருக்கும், இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர் ராகுல், ஓசூர் மண்டல திட்ட மேலாளர் ஜிஜின் துரை, நான் முதல்வன் சார்பில் சுந்தர், பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த மனித வள அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *