இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாக்காளர்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக நேரடியாக வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலுள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 1,873 வாக்குச்சாவடி மையங்களில் 160 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களும், 2 மிக பதட்டமான வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரும் பொருட்டு சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கொண்டு, அதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, தேவையான இடங்களில் சாம்யானா அமைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து வாக்காளர்களுக்கென அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், வாக்காளர்களை கவரும் வண்ணம் மாதிரி வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் தொடர்பாக, பொது பார்வையாளர் ஹரீஷ், காவல் பார்வையாளர் ரோஹன் கனேய்மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் ஆகியோர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லாக்கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி பதட்டமான வாக்குச்சாவடி மையத்திலும் , திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பதட்டமான வாக்குச்சாவடி மையத்திலும், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள செஞ்சை எல்.எப்.ஆர்.சி தொடக்கப்பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையத்திலும் மற்றும் சகாய மாதா நர்சரி பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையத்திலும் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் மேம்படுத்த வேண்டிய பணிகள் தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்கினர்.
இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் .பால்துரை(காரைக்குடி சட்டமன்றத் தொகுதி), சரவணப்பெருமாள் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி), வட்டாட்சியர்கள் அந்தோணிராஜ் (சிங்கம்புணரி), மாணிக்கவாசகம் (திருப்பத்தூர்), தங்கமணி (காரைக்குடி) உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நமது ஸ்பெஷல் நிருபர் P.செல்வநாதன்