கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொதுப்பணித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், சிங்கம்புணரி, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவைகளில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜையினை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசின் அனைத்து துறைகளும் கூடுதலாக முன்னேற்றம் பெற்றிடும் வகையில், சிறப்பான நிர்வாகத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்.
அதில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவைகளை தனது இரு கண்களாக கொண்டு, பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டும், இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக்கூடிய மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் அழியா செல்வமான கல்வியினை நிரம்ப பெற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து, மாணாக்கர்களை பயன்பெற செய்து வருகிறார்.
அறிவுப்போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்தில் மாணவர்கள் நவீன காலத்திற்கு ஏற்றவாறு தங்களது அறிவுத்திறன் மற்றும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, பெற்றோர்களின் சிரமத்தை பொருளாதார ரீதியாக குறைத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாணாக்கர்களுக்கும், பெற்றோர்களின் நிலையில் இருந்து அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார்.
மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திடும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், தேவையான கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், சமையலறைக்கூடம், நூலகங்கள் மற்றும் மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மொத்தம் 08 பள்ளிகளில் மொத்தம் ரூ.1271.88 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கென, அரசின் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. அப்பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றைய தினம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரளிக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.84.72 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் திருப்புவனம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.297.60 மதிப்பீட்டில் 14 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.105.90 லட்சம் மதிப்பீட்டில் 05 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் என மொத்தம் 03 பள்ளிகளில் ரூ.488.22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பணிகள் இன்றைய தினம் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இக்கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட மாத கால ஒப்பந்த அடிப்படையில் தரமான முறையில் கட்டி முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து வகுப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதற்கான இட வசதிகளின் தேவைகளும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதனடிப்படையில், அரளிக்கோட்டை ஊராட்சியில் கட்டப்படவுள்ள பள்ளிக்கான இடத்தினை எனது சொந்த நிதியிலிருந்து வழங்கி எனது பங்களிப்பினையும் ஏற்படுத்தியுள்ளேன் என்பதனை மகிழ்ச்சியுடன் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்று, அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் ஆகியோர் மாணாக்கர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு, அரசுடன் இணைந்து தங்களின் பங்களிப்பினையும் ஏற்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பிள்ளைகள் தடையில்லா கல்வியினை பெறுவதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகளை உயர்கல்வி கற்பதற்கு ஊக்குவிப்பது பெற்றோர்களின் கடமையாகும். மாணாக்கர்களும் தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களது கல்வியில் சிறந்து விளங்கி, தங்களது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தான் பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் ராஜேஸ்வரி (காளையார்கோவில்), சின்னையா (திருப்புவனம்), பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்கள், பள்ளி மாணாக்கர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.