தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகரம்பட்டி கிராமத்தில் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கும் மற்றும் சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டப வளாகத்தில் அமைந்து உள்ள, வீரத்தாய் குயிலி அவர்களுக்கும் திருவுருவச்சிலை அமைப்பதற்கு, அடிக்கல் நாட்டியும் மற்றும் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மகிபாலன்பட்டியில் கட்டப்பட்டு உள்ள சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் அவர்களின் நினைவு தூணையும் திறந்து வைக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் , மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் நாகராசன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,
நாம் இன்றையதினம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணமாக உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையிலும், அவர்களை கவுரவிக்கும் பொருட்டும், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகச்செம்மல்களை என்றென்றும் போற்றி பாதுகாக்கும் வண்ணம், நினைவு மண்டபங்கள் அமைத்து பாதுகாத்து வந்தத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார். அவ்வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் , சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் அளப்பறியாப் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கவுரவிக்கும் பொருட்டும், இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதனடிப்படையில், 200 ஆண்டுகளுக்கு முன்னதாக, நடந்துள்ள உண்மைச் சம்பவத்தை வெளிக்கொணருகின்ற வகையில், சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பையும், தியாகத்தையும் முழுமையாக அளித்த சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழை உலகிற்கு பறைசாற்றுகின்ற வகையிலும், அதற்கு மெருக்கூட்டும் பொருட்டும், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் , தன் பொன்மொழிகளால் வரலாற்று சிறப்புக்களை நூல்களாக பொறித்துள்ளார். அன்றைக்கு முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் விதைத்த விதையின் பயனாக, தமிழ்நாடு முதலமைச்சர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழிற்கு வலுச்சேர்க்கின்ற வகையில், அன்னாரது பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடிட தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு கடந்த 10.6.2023 முதல் அன்னார்களது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, அவர்களது புகழை பறைசாற்றுகின்ற வகையிலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைப்பதற்கும் உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், நகரம்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளி காட்சி வாயிலாக வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
அதேபோன்று, இந்தியா வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுடன் வீரப்போர் புரிந்து, வெள்ளையர்களின் ஆயுத கிடங்கினை அழிப்பதற்கென, தன் உயிரை தியாகம் செய்த வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவினை போற்றிடும் வகையிலும், சிவகங்கை சூரக்குளம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டப வளாகத்தில், வீரத்தாய் குயிலி க்கும் நினைவுத் தூண் முன்னதாக அமைக்கப்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து, வீரத்தாய் அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில், மேற்கண்ட அவ்வளாகத்திலேயே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, அவர்களின் திருக்கரங்களின் வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
மேலும், உலகையே தம் வாழிடமாகக் கருதிய பேரன்புப் பெருமகனார்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொற்றொடரைப் பொற்றொடராக உலகிற்கு வழங்கிய சங்கப் பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்பளவில் 23.26 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டு உள்ள பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும்
தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
இதில், 1974ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞரால், சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற 192ஆம் புறநானூற்றுப் பாடலான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் பாடல் வரிகள் கல்வெட்டில் பதிக்கச் செய்து மகிபாலன்பட்டியில் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுபோன்று, மொழி, இனம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கென பாடுபட்டவர்களை கவுரவிக்கின்ற வகையிலும், அவர்களின் புகழை போற்றுகின்ற வகையிலும், அவர்களுக்கு நினைவகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் திருவுருவச்சிலைகள் ஆகியவைகளை அமைத்து, எதிர்கால சந்ததியினர்கள் அறிந்து கொள்கின்ற வகையில், சிறப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு, தலைசிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழந்து வர கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.