சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற தனி சிறப்பு அங்கீகாரத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.
இது குறித்து கல்லூரி தாளாளர் அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் செய்தியாளர்களிடம் கூறும் போது;
தமிழ்நாட்டில் 20 கல்லூரிகள் ஆராய்ச்சி கல்வி நிறுவன அங்கீகாரத்தை பெற்று உள்ளன. தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி இந்த அங்கீகாரத்தை பெற்று உள்ளது. இந்த அங்கீகாரத்தால் அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து ஆராய்ச்சி கல்விக்கான நிதி அதிக அளவில் பல இடங்களில் இருந்து மாணவர்கள் பெற முடியும். கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளிலும் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இக்கல்லூரியில் அனைத்து துறைகளைச் சார்ந்த மாணவர்களும் ஆராய்ச்சி கல்வியில் சேர்ந்து முனைவர் பட்ட பெற முடியும். இங்கு பணி புரியும் ஆசிரியர்களும் மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி செய்வதற்கும் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வசதிகளை பயன்படுத்தவும் இந்த அங்கீகாரம் வழி வகுக்கிறது. இந்த கல்லூரி ஆராய்ச்சி நிறுவனமாக உயர்ந்து உள்ளதால் இங்கு பயிலும் மாணவர்கள் உலக அளவிலான ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பும் நிதி உதவியும் பெற முடியும். இளநிலை பொறியியல் மாணவர்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற உத்வேகத்தையும் தூண்டும்.
கல்லூரிக்கு கிடைத்து உள்ள இந்த அங்கீகாரத்தின் மூலம் முழு நேர மற்றும் பகுதிநேர முனைவர் பட்டப்படிப்பாக பொறியியல் மற்றும் ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் முனைவர் பட்டம் படிக்கலாம் என கூறினார். பேட்டியின் போது கல்லூரியின் நிதி நிர்வாகி அருட்பணி சேவியர் ராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் மகேஸ்வரன், துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஓலக்கோடு ஜாண், ஆராய்ச்சி புல முதல்வர் மார்சலின் பெனோ, மக்கள் தொடர்பு அதிகாரி ஜஸ்டின் திரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.