
பேரிடர் காலத்தில் மக்களுக்கு அவசரநிலையை தெரியப்படுத்துவதற்கான சோதனை முயற்சியாக, சிறப்பு ஒலியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் செல்போன்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அபாய ஒலியுடன் செல்போன்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் குறுந்தகவல் அனுப்பப்பட்டு, பிறகு அந்த குறுந்தகவலின் ஆடியோவும் ஒலிக்கிறது.
சிறிது நேரத்தில் தமிழில் அதே சிறப்பு ஒலியுடன் குறுந்தகவல் வந்தது. இப்படி செல்போன்களில் தகவல்கள் வரும் என்று முன்கூட்டியே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் இந்த தகவல்களை கண்டு யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுஇருந்தது.
பேரிடா் அவசரகால தொடா்பை மேம்படுத்தும் வகையில் அனைத்து செல்போன்களுக்கும் இன்று பரிசோதனை முறையாக இந்த குறுந்தகவல் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், பேரிடா் கால தேசிய அளவிலான அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபாா்க்கும் நோக்கத்துடன் தொலைத்தொடா்பு துறை மூலம் தொலைபேசி ஒளிப்பரப்பு எச்சரிக்கை அமைப்பு மூலம் பேரிடா் கால அவசர தொடா்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் மாதிரி சோதனையாக அனைத்து செல்போன்களுக்கும் அக். 20-ஆம் தேதி பரிசோதனை அழைப்பு விடுக்கப்படுகிறது.
இதன்மூலம் பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடா் சமயங்களில் பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்து உரிய சமயத்தில் தொலைபேசி வழியாக எச்சரிக்கை விடுக்க இயலும். அக்டோபா் 20-ஆம் தேதியன்று மேற்கொள்ள உள்ள எச்சரிக்கை அழைப்பு பரிசோதனைக்காக மட்டுமே தேசிய பேரிடா் மேலண்மை அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பரிசோதனை அழைப்பு தொடா்பாக, பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் எனவும், அதற்கு எந்தவித எதிா்வினையாற்றும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பேரிடா் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவசரகாலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைளை வழங்குவதற்காகவும், இந்த சோதனை நடைபெறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.