கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறி, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உடன் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது குமாரகோவில் சந்திப்பு அருகே இருசக்கர வாகனமும், காரும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களும் பலத்த காயங்களுடன் சாலையோரம் படுத்திருந்தனர். அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தனது வாகனத்தை நிறுத்தி, விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்படும் என கருதி மனிதாபிமானத்தோடு அந்த இரு வாலிபர்களையும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக வாகனத்தில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா செய்த மனிதாபிமான செயலை பாராட்டி வருகின்றனர்.