தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில அமைப்பாளர் டேவிட்சன் தலைமையில் வணிகர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது அண்மையில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்ததை மாநகராட்சியாக
மாற்றிய உடனேயே மாநகராட்சி சட்டம் 2019-ன்படி நடைமுறைகள் செய்யும்
போது வணிகர்களையும் பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கின்றது.
மாநகராட்சியாய் தரம் உயர்த்தியதினால் மாநகர மக்களின் வாழ்க்கை
தரமோ, வியாபாரிகளின் வர்த்தகமோ எந்த வளர்ச்சியையும் அடையவில்லை.
பொதுமக்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம்
பொருட்களை வாங்கும் போது கடைகளின் வியாபாரங்கள் மிக அதிகமாக
குறைந்து விட்டது. ஜிஎஸ்டி வரியின் தாக்கத்தினால் வேலை வாய்ப்பற்றவர்களின்
கடைசி புகலிடமான சில்லரை வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில்
உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கடைகளின் மாடிகளில்
பெரும்பாலும் கடைகள் மூடிய நிலையில் உள்ளது. மாநகர பகுதிகளில் வர்த்தகம்
இழந்து கடைகள், வீடுகள் வாடகைக்கு என்ற போர்டுகள் தொங்கிய நிலையில்
உள்ளது.
வணிகர்கள் வாழ்வாதாரம் இழந்து ஏதாவது தொழில் செய்ய வேண்டுமே
என்று கடைகளை திறந்து வியாபாரம் செய்து வரும் நிலையில் கடைகள் மற்றும்
வீடுகளின் வரிகள் பல மடங்கு உயர்த்தி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதை
வணிகர்கள் மற்றும் பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சியடைய
செய்திருக்கின்றது.
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மாநகர வியாபாரிகளின் கடைகள்
மற்றும் பொதுமக்களின் வீடுகளுக்கு பல மடங்கு வரி உயர்த்தியிருப்பதை ரத்து
செய்திட பேரவை சார்பாக வேண்டுகின்றேன். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.