தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கால்நடை பாரமரிப்பு துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.15 கோடி மதிப்பில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து சிறப்பித்தார். மாவட்டத்தில் உள்ள 49 கால்நடை மருந்தகங்கள், 2 கால்நடை மருத்துவமனைகள், 1 பன்முக கால்நடை மருத்துவமனை உள்ளன. புதிதாக திறக்கப்பட்டு உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் அனைத்து நிலையங்களில் இருந்தும் பெறப்படும் சாணம், ரத்தம், பால் முதலிய மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, நோய்கள் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் அனைத்து தடுப்பூசி திட்டங்களையும் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். மேலும் தடுப்பூசி பணிக்கு முன்னும் அதற்கு பின்னும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்து தகவல்களை சேகரிப்பதும், கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் முக்கிய பணியாகும்.
தொடர்ந்து பறவைக்காய்ச்சல் நோய் கண்டறிய கோழி பண்ணைகள் மற்றும் புறக்கடைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புதல், அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்படும்போது மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடி ஏற்படுத்தி நோயுற்ற கோழிகளின் போக்குவரத்தை தடுத்து நிறுத்தல், கால்நடைகளில் ஏற்படும் மலட்டுத்தன்மையை நீக்க பரிசோதனைகள் மேற்கொண்டு அதற்கான நோய் காரணியை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மேற்கொள்ளும். கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை விவசாயிகள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார். நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் கால்நடை பாரமரிப்புதுறை மரு.முகமது கான், துணை இயக்குநர் மரு.தங்கராஜ், உதவி இயக்குநர்கள் மரு.சுப்பிரமணியன் (நோய் புலானாய்வு பிரிவு), மரு.சந்திரசேகர், மரு.முகமது இஸ்மாயில், மரு.ராஜமோகன், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.சஜயன், மரு.ஜெபா கிலாரி, மரு.ஜிமி கரோலின், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
திங்கள்நகரில் கால்நடை நோய் புலனாய்வு கட்டிடம் திறப்பு
