தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு துறை அலுவலகங்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக திங்கள்நகர் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டமானது இன்று செயல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு துறை அலுவலகங்களை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதன் ஒருபகுதியாக திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு, முதலமைச்சரின் மகளிர் விடியல் பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண்களிடம் அரசின் திட்டங்கள் உங்களை சென்றடைகிறதா என்று கேட்டறியப்பட்டது. மேலும் பேருந்துநிலையத்தில் அமைந்து உள்ள பொது கழிப்பறை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தலக்குளம் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி ஆய்வு மேற்கொண்டதோடு, விடுதியில் உணவின் தரம், தங்கும் வசதிகள், பொருட்கள் வைப்பறை, சுற்றுப்புறசூழல், படிக்கும்சூழல் உள்ளிட்டவைகள் குறித்து மாணவியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு, படிப்பில் தனிக்கவனம் செலுத்தி கல்வி பயிலுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
குளச்சல் அரசு மருத்துவமனையினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நேயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து குளச்சல் பேருந்து நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குளச்சல் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்துடன், 36 கடைகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலக்குளம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களுடன் இரவு உணவு உண்டு மகிழ்ந்தார்.
ஆய்வுகளில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் ரவிகுமார், கல்குளம் வட்டாட்சியர் முருகன், தனி வட்டாட்சியர் அனில்குமார், குளச்சல் நகராட்சி ஆணையர் (பொ) செந்தில் குமார், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், செயல் அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளார்கள்.