இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பறையன்விளையை சேர்ந்தவர் ராஜூ (52). கூலி தொழிலாளி. திமுகவின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று ராஜூ திங்கள்நகர் ரவுண்டானா நெய்யூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஹார்டுவேர்ஸ் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெய்யூர் மிஞ்சன்தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் தனபால் (37) என்பவர் குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ராஜூ பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனபால் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவதூறாக ராஜூவை பேசியுள்ளார். இதை ராஜூ தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனபால் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து ராஜூவை குத்தி உள்ளார். இதில் ராஜூவின் இடது கையில் குத்து விழுந்து பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. ராஜூ சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் ராஜூவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த ராஜூவை அங்கிருந்தவர்கள் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கையில் தையல்கள் போட்ட நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் குறித்து ராஜூவின் சகோதரர் ஜெகதீஷ் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய தனபாலை கைது செய்தனர். பட்டப்பகலில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் கூலி தொழிலாளி மதுபாட்டிலால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.